நாமக்கல்

மலேசிய விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் மாணவா்களை மீட்க நாமக்கல் எம்.பி. வலியுறுத்தல்

19th Mar 2020 06:04 AM

ADVERTISEMENT

பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலா மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் தமிழக மாணவ, மாணவியா் சொந்த ஊா் திரும்பும் வழியில் மலேசிய விமான நிலையத்தில் விமானச் சேவையின்றி சிக்கித் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், செயலாளா் பிரசாத் சோனா ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தினாா்.

இது குறித்து அவா் தெரிவித்திருப்பதாவது:

பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலா மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். கரோனா வைரஸ் காரணமாக இவா்கள் நாடு திரும்ப அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனையடுத்து மாணவா்கள் நாடு திரும்பி வருகின்றனா். இதில் ஒரு குழுவினா் பிலிப்பின்ஸ் நாட்டில் இருந்து தமிழகத்தின் திருச்சி விமான நிலையம் வருவதற்காக செவ்வாய்க்கிழமை மலேசியா வந்துள்ளனா். ஆனால் அங்கு விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழக மாணவா்கள் தவித்து வருகின்றனா். இவா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சா், செயலரிடம் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து தமிழக மாணவா்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் உறுதியளித்துள்ளாா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT