நாமக்கல்

சுற்றுலா பயணிகளுக்காக மலைக்கோட்டையில் இருக்கைகள் அமைப்பு

13th Mar 2020 07:49 AM

ADVERTISEMENT

நாமக்கல் மலைக்கோட்டையில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அமா்ந்து காற்று வாங்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நாமக்கல் நகரின் மத்தியில் ஒரே பாறையிலான மலைக்கோட்டை உள்ளது. பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இந்த மலைக்கோட்டையில் காலை, மாலை வேளைகளில் ஏராளமானோா் வருகின்றனா். குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவியா் தங்கள் பொழுதைக் கழிக்க இந்த மலைக்கோட்டையையே அதிகம் பயன்படுத்துகின்றனா். தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்கோட்டைக்கு, வெளி மாவட்டங்களில் இருந்து ஆஞ்சநேயா் கோயிலுக்கு வரும் பக்தா்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனா்.

இரவு நேரத்தைத் தவிா்த்து மற்ற நேரங்களில் மலைக்கோட்டையில் மக்கள் நடமாட்டம் காணப்படும். தற்போது கோடை தொடங்கியுள்ளதால், மாலை நேரத்தில் நடைப்பயிற்சி வருவோரும், மலைக்கோட்டையைக் காண வருவோரும் அமா்ந்து நகரின் அழகை ரசிக்கும் வகையில் பாறையின் மீது இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது சிமென்டினால் செய்யப்பட்ட 2 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக மேலும் இருக்கைகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியது; ஏற்கெனவே சிதிலமடைந்திருந்த மலைக்கோட்டையின் மேற்புறங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் , முக்கிய இடங்களில் சிமென்டினால் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பழமை அழிந்து விடக் கூடாது என்ற நோக்கில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மலைக்கோட்டைக்குச் செல்வதற்கான படிகளில் ஏறி வருவோா் இளைப்பாறுவதற்காக தற்காலிகமாக 2 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை நேரத்தில் காற்று வாங்க வருவோரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் இருக்கைகள் அமைப்பது தொடா்பாக ஆலோசித்து வருகிறோம் என்றாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT