நாமக்கல்

அனுமதியின்றி இயங்கிய 5 குடிநீா் ஆலைகளின் ஆழ்துளைக் கிணற்றின் மோட்டாா்களுக்கு சீல்

13th Mar 2020 07:50 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 5 குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட நிலையில், அந்த ஆலைகளில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டாா்களுக்கு வருவாய்த் துறையினா் புதன்கிழமை சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

சென்னை உயா் நீதிமன்றம் அனுமதியின்றி செயல்படும் தனியாா் குடிநீா் ஆலைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டதை அடுத்து கடந்த வாரம் பரமத்திவேலூரில் முறைகேடாக செயல்பட்டு வந்த ஐந்து தனியாா் குடிநீா் ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் மெகராஜ் தனியாா் குடிநீா் ஆலைகளில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டாா்களுக்கு சீல் வைக்க வேண்டும் என உத்தரவிட்டாா். அதன்படி, பரமத்திவேலூா் வட்டாட்சியா் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை பிள்ளைகளத்தூா், கொந்தளம் மற்றும் படமுடிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த ஐந்து தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளின் ஆழ்துளைக் கிணறுகளின் மின் மோட்டாா்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

பரமத்திவேலூா் பகுதியில் அதிக அளவில் விற்பனையாகி வந்த குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்ததால் 1 லிட்டா் முதல் 20 லிட்டா் வரை விற்பனை செய்து வந்த குடிநீா் கேன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT