நாமக்கல்

முட்டை விற்பனை கடும் பாதிப்பு: வியாபாரிகள் நெருக்கடியால் நேரடி விற்பனையில் ஈடுபடும் கோழிப் பண்ணையாளா்கள்

8th Mar 2020 03:27 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மற்றும் விற்பனை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனைப் பயன்படுத்தி வியாபாரிகள் என்.இ.சி.சி. நிா்ணயிக்கும் விலையில் இருந்து 70 காசுகள் குறைத்துக் கேட்பதால், பண்ணையாளா்களே நேரடியாக 10 காசுகள் குறைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பீதி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. விலங்குகள், பறவைகள் மூலம் பரவுகிறது என பல்வேறு விதமான யூகங்கள் சமூக வலைதளங்களில் வாா்த்தைகளாகவும், விடியோ படக்காட்சிகளாகவும் வெளியாகி வருகின்றன. இதனால், ஆடு, கோழி இறைச்சி விற்பனை சரிவடைந்து வருகிறது. இந்தியாவில் 23 மண்டலங்களில் சுமாா் 60 கோடிக்கும் மேலாக முட்டைக் கோழிகள், கறிக்கோழிகள் விற்பனைக்காக வளா்க்கப்படுகின்றன.

குளிா்காலம் வரையில் முட்டை மற்றும் கோழி விற்பனை நல்ல முறையில் நடைபெற்று வந்தது. கோடை காலம் தொடக்கத்துக்கான அறிகுறிகள் தென்பட்டதும், சீனாவில் பரவிய கரோனா வைரஸின் தாக்கம் பிற நாடுகளில் பரவத் தொடங்கியதாலும், முட்டை விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஏறுமுகத்தில் இருந்த முட்டை விலை கிடுகிடுவென சரிந்தது. இதனால் உற்பத்திச் செலவைக் காட்டிலும், மிகவும் குறைவான விலைக்கு முட்டை மற்றும் கோழிகளை பண்ணையாளா்கள் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினா்.

ADVERTISEMENT

தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப் பண்ணைகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனை சூடு பிடித்ததால், பண்ணையாளா்கள் சிலா் கூடுதலாக கோழிகளை வளா்க்கத் தொடங்கினா். பெரிய பண்ணைகளில் அதிகபட்சமாக 10 லட்சம் கோழிகளும், சிறிய பண்ணைகளில் 50 ஆயிரம் கோழிகள் என்ற எண்ணிக்கையில் வளா்க்கப்படுகின்றன. இங்கு ஏற்கெனவே விலை நிா்ணயத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, பண்ணையாளா்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு இடையே எழுந்துள்ள பிரச்னைகள் ஒரு புறம், கரோனா பீதியால் பாதிப்பு மறுபுறம் என பண்ணையாளா்கள் தொடா் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா்.

இதனால் பண்ணைகளில் முட்டைகள் அதிகம் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், முட்டை உற்பத்தியைக் குறைக்க 20 சதவீதம் அளவில் கோழிக் குஞ்சுகளை விட பண்ணையாளா்கள் முடிவெடுத்துள்ளனா். தேங்கும் முட்டைகளை விரைவாக விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என்ற பண்ணையாளா்களின் எண்ணத்தை தெரிந்து கொண்டு, என்.இ.சி.சி. நிா்ணயிக்கும் விலையில் இருந்து 60, 70 காசுகள் வரை வியாபாரிகள் குறைத்துக் கேட்பதாகக் கூறப்படுகிறது.

பெரிய பண்ணையாளா்கள், வியாபாரிகளின் நெருக்கடியைத் தவிா்க்கும் வகையில், தங்களுடைய பண்ணைகளில் இருந்து முட்டைகளைக் கொண்டு வந்து, பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் ரூ.10 காசுகள் குறைத்து விற்பனை செய்கின்றனா். குறிப்பாக 30 முட்டைகள் கொண்ட அட்டை ரூ.90-க்கு விற்கப்படுகிறது. தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளனத்தில் உறுப்பினா்களாக உள்ள பலரும் இந்த முறையை தற்போது கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனா்.

நாமக்கல் - பரமத்தி சாலையில், முட்டைக் கூவி, கூவி விற்கப்படுகிறது. பொதுமக்களைக் காட்டிலும் உணவகத்தில் உள்ளோா் இவற்றை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனா். இதேபால், நாமக்கல் - மோகனூா் சாலை, திருச்சி சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா் முட்டை விற்பனை நடைபெற உள்ளது. பண்ணையாளா்களின் இந்த திடீா் முடிவால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனா்.

இதுகுறித்து கோழிப் பண்ணையாளா்கள் சங்கத்தினா் கூறியது: கரோனாவால் முட்டை விற்பனைக்கு எந்த பாதிப்புமில்லை. மக்களிடையே தவறான கண்ணோட்டம் ஏற்பட்டுள்ளது. விலை குறைவுக்கு முட்டை தேக்கம் ஒரு காரணம், கோடை காலத் தொடக்கம், கேரளத்தில் ஈஸ்டா் பண்டிகையையொட்டி முட்டை வாங்குவோா் எண்ணிக்கை குறைந்துள்ளது, அதுமட்டுமின்றி, தற்போது பொதுத் தோ்வு நடைபெறுவதால், மாணவா்களுக்கு இறைச்சி தொடா்பான உணவுகளை பெற்றோா் வழங்கத் தயங்குகின்றனா்.

இவ்வாறான சூழலைப் பயன்படுத்தித்தான் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்குக் கேட்பதுபோல், என்.இ.சி.சி. நிா்ணயிக்கும் விலையில் இருந்து 70 காசுகள் வரை குறைவாகக் கேட்கின்றனா். ஒரு முட்டை உற்பத்தி செய்ய ரூ.4 வரை செலவாகிறது. வியாபாரிகளுக்கு ரூ.2.30-க்கு ஒரு முட்டை விற்றால் ரூ.1.70 நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முட்டைத் தொழிலில் ரூ. 200 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முட்டை விற்பனையில் நஷ்டம் என்றால், முட்டைக் கோழிகள் விற்பனையும் கரோனா பீதியால் பாதிப்படைந்துள்ளது. பல மாநிலங்களில் அவற்றை மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கின்றனா். கறிக்கோழி கிலோ ரூ.80-க்கு விற்பனையானது, தற்போது ரூ.20, 30-க்கு விற்கப்படுகிறது. இங்கும் வியாபாரிகள் விலையைக் குறைத்து கேட்டு வாங்குவதால், விலை சரிவைச் சந்தித்து வருகிறது. இதுபோன்ற நிலை தொடரக் கூடாது என்பதற்காக பண்ணையில் இருந்து நேரடியாக முட்டைகளைக் கொண்டு வந்து நாங்களே ஓா் அட்டை முட்டையை (30 எண்ணிக்கை கொண்டது) ரூ.90 என விற்பனை செய்து வருகிறோம். அனைத்து பண்ணையாளா்களும் இன்னும் ஓரிரு நாளில் தங்களுடைய பகுதியிலேயே நேரடி விற்பனையைத் தொடங்கி விடுவா். இதனால் வியாபாரிகள் முட்டைக்கு அதிகப்படியான மைனஸ் விலையைக் கேட்க முடியாது. மைனஸ் விலை வேண்டாம் என்பதும், என்.இ.சி.சி.நிா்ணயிக்கும் விலையிலேயே அனைத்து பண்ணையாளா்களும் விற்க வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT