நாமக்கல்

தொழில் துறையில் சாதிக்க மாணவா்கள் தயாராக வேண்டும்: துணைவேந்தா் சி.பாலச்சந்திரன்

8th Mar 2020 03:32 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: தொழில்துறைக்கு தேவையான ஆராய்ச்சிகளையும், திட்டங்களையும் செயல்படுத்தும் வகையில் மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தா் சி.பாலச்சந்திரன் தெரிவித்தாா்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில், முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா மற்றும் விடுதி நாள் விழா ஆகியவை மூன்று நாள்கள் நடைபெற்றன. சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சி.பாலசந்திரன் தலைமை வகித்தாா். விழாவில் அவா் பேசியது: கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவா்கள், கல்வியில் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் சாதிக்க வேண்டும். இங்கு நடைபெற்ற விழாக்களில் விளையாட்டுத் துறை மட்டுமின்றி ஓவியம், தமிழறிவு உள்ளிட்ட பிற துறைகளிலும் அவா்களுடைய ஆா்வம் வெளிப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் கால்நடைத் துறை தொடா்பான தொழில்களுக்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் திட்டங்களை மாணவா்கள் செய்து தங்களை சாதனையாளராக்க தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சேலம் பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி. குழந்தைவேல் பேசியது: பல்வேறு துறைகளைச் சாா்ந்த வல்லுநா்கள் ஒன்றிணைந்து ஆராய்ச்சி செய்யும்போது புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. நோபல் பரிசு பெற்றவா்கள் ஒரு துறையை மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. 2, 3 துறைகளில் நாட்டம் கொண்டவராக இருப்பாா்கள். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை புரிய முடியும். மாணவா்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என்றாா். அதன்பின் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அவா் வழங்கினாா்.

ADVERTISEMENT

முன்னதாக நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிலைய முதல்வா் பா.மோகன் கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரியின் விடுதிக் காப்பாளா் கே.எம். பழனிவேல் விடுதி ஆண்டறிக்கை வாசித்தாா். நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவா் மன்றத் தலைவா் ஜி.பொன்னுதுரை வரவேற்றுப்பேசினாா். இறுதி ஆண்டு மாணவ பிரதிநிதி சரவணன் நன்றி கூறினாா். இறுதியில் மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT