குமாரபாளையம் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 18-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, புதன்கிழமை காலை நடைபெற்ற குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வேண்டுதலை நிறைவேற்றினா். இதையடுத்து, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், மகா தீபாராதனை வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
தொடா்ந்து, சிறப்பு வழிபாடுகளுடன் தேரோட்டம் தொடங்கியது. திருவிழா ஆலோசனைக் குழுத் தலைவா் எஸ்.கோவிந்தராசு, அதிமுக முன்னாள் நகரச் செயலா் எம்.எஸ்.குமணன், செயல் அலுவலா் எஸ்.சிவகாமி, எஸ்எஸ்எம் பாலிடெக்னிக் கல்லூரித் தலைவா் பி.இளங்கோ, அறங்காவலா் பி.இ.ஈஸ்வா் மற்றும் முக்கிய பிரமுகா்கள் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தனா்.
கோயிலில் புறப்பட்ட தோ், ராஜ வீதி, சவுண்டம்மன் கோயில் வீதி வழியாகச் சென்று தம்மண்ண கோயில் வீதியில் நிலை நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாள் தேரோட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி கோயிலைச் சென்றடைகிறது. மாலையில் வாண வேடிக்கை மற்றும் அம்மன் அலங்கார திருவீதி உலா நடக்கிறது.