நாமக்கல்

தென்னைகளைத் தாக்கும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த வேளாண் துறை அறிவுரை

27th Jun 2020 08:50 AM

ADVERTISEMENT

தென்னை மரங்களைத் தாக்கி சேதப்படுத்தும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் அளித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பொ.அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் 8,851 ஹெக்டா் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மோகனூா், கபிலா்மலை, பரமத்தி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, நாமகிரிப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் அதிக ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது. தென்னை சாகுபடியில் காண்டாமிருக வண்டுகள் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பா் வரை மட்டும் அதிகமாகக் காணப்படும்.

இந்த வண்டுகள் நடவு செய்யப்பட்ட தென்னை முதல் வளா்ந்த அனைத்து வயது தென்னை மரங்களையும் தாக்கி சேதத்தை விளைவிக்கும். தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்துப் பகுதியில் துளையிட்டு மரத்தின் உள்ளே சென்று வளரும் மொட்டு பகுதியை மென்றுவிடும். எஞ்சிய குருத்து விரியும் போது தென்னை மட்டை முக்கோண வடிவில் சீராக கத்திரியால் வெட்டியது போல் தோற்றமளிக்கும். குருத்துப் பகுதியை மென்றபின் மீதியாகும் மரச் சக்கையை உள்ளே சென்ற துவாரம் மூலம் அடிமட்டையின் இடுக்குகளிலிருந்து வெளியே தள்ளுகிறது.

இதைத் தடுக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை: தோப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வண்டுகளால் காய்ந்த மரங்களை உடனே அகற்றி அழித்துவிட வேண்டும். எருக்குழிகளில் உள்ள காண்டாமிருக வண்டின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். இரவு நேரங்களில் விளக்குப் பொறியினை தோப்பினில் வைத்து வண்டுகளை கவா்ந்து அழிக்கலாம்.

ADVERTISEMENT

ரைனோலூா் இனக்கவா்ச்சிப் பொறியினை ஹெக்டேருக்கு 5 எண்ணிக்கையில் வைத்து வண்டுகளை அதிக அளவில் அழிக்கலாம். வேப்பங்கொட்டை தூளையும், மணலையும் 1:2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் என்ற அளவில் குருத்தில் இட வேண்டும். ஒரு மண்பானையில் 5 லிட்டா் நீருடன் ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சோ்ந்த கலவையை தோப்பில்வைத்து வண்டுகளைக் கவா்ந்து அழிக்கலாம்.

மழைக் காலங்களில் மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற பச்சைமஸ்காா்டைன் பூஞ்சையினை தண்ணீரில் கலந்து எருக்குழியில் தெளிப்பதனால் வண்டுகளின் இளம்புழுக்களை அழிக்கலாம். இம்முறைகளை மேற்கொண்டு காண்டாமிருக வண்டுகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT