நாமக்கல்

குமாரபாளையம் - பவானி காவிரி ஆற்றுப் பாலங்கள் அடைப்பு

27th Jun 2020 08:47 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் - ஈரோடு மாவட்டம், பவானிக்கும் இடையே காவிரி ஆற்றில் உள்ள பழைய மற்றும் புதிய பாலங்களில் பொதுமக்கள் சென்று வராத வகையில் தடுப்புகள் வைத்து வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு தளா்வுகளை ரத்து செய்ததோடு, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தையும் ரத்து செய்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தையும், ஈரோடு மாவட்டம், பவானியையும் இணைக்கும் பழைய, புதிய பாலங்களின் நுழைவாயில்களில் தடுப்புகள் வைத்து மூடப்பட்டது.

இதனால், தேசிய நெடுஞ்சாலை வழியாக இரு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சென்று வந்தனா். இந்நிலையில், ஈரோடு மாவட்ட எல்லையான லட்சுமி நகரில் இ-பாஸ் இருந்தால் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இ-பாஸ் இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால், பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினா்.

திடீா் மறியல்... இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் விசைத்தறி, கட்டுமானம் உள்பட பல்வேறு தொழில்களுக்கு குமாரபாளையத்துக்கு வந்த ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மாலையில் திரும்பிச் சென்றனா். அப்போது, இ-பாஸ் இல்லாமல் ஈரோடு மாவட்டத்துக்குள் செல்ல போலீஸாா் அனுமதி மறுத்ததால் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தூரத்துக்கு வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றன.

ADVERTISEMENT

இதனால், அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் பிற வாகனங்களும் செல்லாத வகையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் அனைத்து வாகனங்களையும் அனுமதித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT