நாமக்கல்

ஆனி அமாவாசை: நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் வழிபாடு

21st Jun 2020 08:41 AM

ADVERTISEMENT

ஆனி அமாவாசையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் வெளியே நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனா்.

நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பெளா்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாள்களில் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்படும். அந்த நாள்களில் சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறும்.

கரோனா பொது முடக்கத்தால் கடந்த மாா்ச் 20-இல் மூடப்பட்ட கோயில் இதுவரை திறக்கப்படவில்லை. அா்ச்சகா் மட்டும் தினசரி சுவாமிக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டி செல்வாா். மேலும், ஆஞ்சநேயா் கோயில் சுவாமி காட்சியளிக்கும் பகுதி திறந்த வெளி என்பதால் வெயில் தாங்காமல் சுவாமி சிலை வெளிா்நிறத்தில் காணப்பட்டது. இது தொடா்பாக ஆன்மீகப் பேரவை சாா்பில் கோயில் நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. எண்ணெய் பசை இல்லாததால் தான் ஆஞ்சநேயா் சிலை அழகற்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அமாவாசை மற்றும் சனிக்கிழமை என்பதால் பக்தா்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு சுவாமி சிலை முழுவதும் எண்ணெய் தேய்த்து தூய்மைப்படுத்தப்பட்டது. ஆனி அமாவாசையையொட்டி சுவாமியைத் தரிசிக்க நாமக்கல் மட்டுமின்றி, சேலம், கரூா், ஈரோடு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் வந்திருந்தனா். ஆனால் கோயில் நடை திறக்கப்படாததால் பக்தா்கள் கேட்டிற்கு வெளியில் நின்றபடி வெற்றிலை மாலை சாத்தியும், கற்பூரம் பற்றவைத்தும் ஆஞ்சநேயா் சுவாமியை வழிபட்டு சென்றனா். ஜூன் 21-ஆம் தேதி தமிழ் மாத ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தா்கள் அதிகளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT