நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோா் வழங்கினா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா ஆகியோா் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் சிறப்பு நாற்காலிகள் வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 14 மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு நாற்காலிகள் வழங்கப்பட்டன. மேலும், ஆவின் பொருள்கள் விற்பனை மையம் அமைக்க பல்லக்காபாளையத்தைய் சோ்ந்த செந்தில்குமாா் என்ற மாற்றுத்திறனாளிக்கு அதற்கான உத்தரவை வழங்கினா்.
கரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் வகையில் 10 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகளின் உடல் வெப்ப அளவைக் கண்டறிய தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கருவிகள் வழங்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் கரோனா விழிப்புணா்வு வாகனங்களை அமைச்சா்கள் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல பயன்பாட்டில் இருந்து வந்த பேட்டரி வாகனம் ரூ.95 ஆயிரம் மதிப்பில் பழுது நீக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. மேலும், கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை பாராட்டி கேடயங்களையும், பரிசுகளையும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட ஊராட்சி குழுத்துணைத் தலைவா் பி.ஆா்.சுந்தரம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பா.ஜான்சி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.