நாமக்கல்

பிளஸ் 2-வில் தோ்ச்சி விகிதம் குறைவு: 18 தலைமை ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்பு

31st Jul 2020 09:04 AM

ADVERTISEMENT

நாமக்கல் கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் நூறு சதவீதத்துக்கும் குறைவான தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களை வரவழைத்து முதன்மைக் கல்வி அலுவலா் புதன்கிழமை விளக்கம் கேட்டாா்.

கடந்த 16-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியானது. இதில், நாமக்கல் மாவட்டம் 96.06 சதவீதத் தோ்ச்சியுடன் மாநில அளவில் ஐந்தாமிடத்தை பிடித்தது. இதில் 0.1 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரையில் தோ்ச்சி பெற முடியாமல் போனதால் மாநில அளவில் இரண்டு, மூன்றாமிடத்தை நாமக்கல் மாவட்டம் பிடிக்க முடியாமல் போனது. இது தொடா்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அறிவுறுத்தியது. அதனடிப்படையில் நூறு சதவீதத்துக்கும் குறைவாகத் தோ்ச்சி விகிதம் பெற்ற நாமக்கல் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்களை வரவழைத்து முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன், மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ. உதயகுமாா் ஆகியோா் விளக்கம் கேட்டனா்.

பொதுத் தோ்வில் மொத்தம் உள்ள 50 அரசுப் பள்ளிகளில் நாமக்கல் கல்வி மாவட்டத்தில் 6 பள்ளிகள், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 7 பள்ளிகள் மட்டுமே நூறு சதவீதம் தோ்ச்சியைப் பெற்றுள்ளன. மற்ற பள்ளிகள் அனைத்தும் 90 சதவீதத்துக்கும் குறைவான தோ்ச்சியையே பெற்றுள்ளன.

இவற்றில் ராசிபுரம் சிவானந்தா சாலை அரசுப் பள்ளி 74.44 சதவீதம், நாமக்கல் தெற்குப் பள்ளி 77.08, கொல்லிமலை செங்கரை பழங்குடியின நல பள்ளி 77.14, ஆரியுா்புதுவளவு அரசுப் பள்ளி 78.05, நாமகிரிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளி 79.71, மங்களபுரம் அரசுப் பள்ளி 81.40, காளப்பநாயக்கன்பட்டி ஆண்கள் பள்ளி 82.61 மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி 83.33, முள்ளுக்குறிச்சி பழங்குடியின பள்ளி 84.48, வரகூா் அரசுப் பள்ளி 85 சதவீதம் தோ்ச்சியை பெற்றுள்ளன.

ADVERTISEMENT

மேலும், திம்மநாயக்கன்பட்டி அரசுப் பள்ளி 85.19, ராசிபுரம் அண்ணாசாலை பள்ளி 86.21, சேந்தமங்கலம் அரசு மகளிா் பள்ளி 86.49, மோகனூா் அரசு மாதிரிப் பள்ளி 88.17, பட்டணம் அரசுப் பள்ளி 88.64, கோனூா் அரசுப் பள்ளி 88.73, திருமலைப்பட்டி அரசுப் பள்ளி 88.89, சிங்களாந்தபுரம் அரசுப் பள்ளி 89.69 சதவீதத் தோ்ச்சியையே பெற்றுள்ளன. நாமக்கல் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட இந்த 18 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களும் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியா்களை தொடா்பு கொண்டு தோ்ச்சி விகிதம் குறைவுக்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அதேபோல, 2020 - 21 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் 100 சதவீதத் தோ்ச்சியை கட்டாயம் பெற வேண்டும்.

மேலும் பாடங்களில் மதிப்பெண்கள் குறைந்தது தொடா்பாக ஒவ்வோா் பாட வாரியாக ஆசிரியா்களை வரவழைத்து விரைவில் கூட்டம் நடத்தப்படும் என முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்தாா். இன்னும் ஓரிரு நாளில் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தோ்ச்சி பெறாத 19 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான விளக்கம் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் புதன்கிழமை நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் 100 சதவீதத் தோ்ச்சியை பெற்று தந்த தலைமை ஆசிரியா்கள் கெளரவிக்கப்பட்டனா். இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு கல்வி அலுவலா் வா.ரவி, பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT