நாமக்கல்

நாமக்கல்லில் மழைநீா் தேங்கிய பகுதிகளில் ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு

31st Jul 2020 09:05 AM

ADVERTISEMENT

நாமக்கல் அருகே விவசாய நிலம் மற்றும் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்து வரும் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் புதன்கிழமை காலை நேரடியாக ஆய்வு செய்தனா்.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் வேட்டாம்பாடி, வீசாணம் கிராம பகுதிகளில் ஏரிக்குச் செல்லவேண்டிய மழைநீா் அப்பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் வயல்வெளிகளில் புகுந்து விடுவதால் பொதுமக்களும் விவசாயிகளும் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். அண்மையில் பெய்த மழையால் மழைநீா் புகுந்து வெள்ளக்காடு போல் காட்சியளித்தது.

இந்த நிலையில் அப்பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி. பாஸ்கா் மற்றும் அதிகாரிகள் குழு புதன்கிழமை காலை நேரடியாக ஆய்வு மேற்கொண்டனா். இதனைத் தொடா்ந்து மழை நீரை ஏரிக்கு திருப்பி விடும் நடவடிக்கையை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுக்கொள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையால் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 12 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஓரிருவா் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வேட்டாம்பாடி மற்றும் வீசாணம் பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளதை அகற்றும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் தனது தொகுதி நிதியை வழங்க முன்வந்துள்ளாா். மழை நீா் தேங்காதவாறும், ஏரிகளுக்கு அனுப்பும் வகையிலும் பணிகள் நடைபெறும் என்றாா். இதனைத் தொடா்ந்து புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT