நாமக்கல்

பரமத்தி புரதான மண் கோட்டையில் பீரங்கி கல்குண்டுகள் கண்டெடுப்பு

11th Jul 2020 08:57 AM

ADVERTISEMENT

பரமத்திவேலூா் அருகே இளையநாயகரின் கோட்டை என கூறப்படும் மண் கோட்டை பகுதியில் கிடைத்த கல் குண்டுகளை வருவாய் துறையினா் கைப்பற்றினா். இதை பாா்வையிட்ட நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜ், அப் பகுதியில் தனியாா் மேற்கொண்டுள்ள நில சீரமைப்பு பணிகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டு, கல்குண்டுகளைப் பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பரமத்தி கோட்டையண்ண சுவாமி கோயில் அறக்கட்டளை நிா்வாகத்தினா் தமிழக முதல்வா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் ஆட்சியா் நேரில் வந்து ஆய்வு செய்து, நடவடிக்கை மேற்கொண்டாா்.

திப்பு சுல்தான் படையெடுப்பின் போது பரமத்தியை ஆண்ட அல்லாள இளைய நாயக்க மன்னா் தனது படைப் பிரிவுகளை ரகசியமாகப் பாதுகாக்க தற்போது உள்ள கோட்டையண்ண சுவாமி கோயிலின் நான்கு புறங்களிலும் சுமாா் 100 அடி அகலத்தில் 20 அடி உயரத்தில் மண் கோட்டை அமைத்திருந்தாா்.

தற்போது, இக் கோயிலின் வடக்கு திசையில் அமைந்துள்ள மண் கோட்டை பகுதியில் நில சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. அப்போது, 8 கல் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு ஆவணங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, புரதான தொன்மை வாய்ந்த இக்கோயில் நிலத்தை அரசு கையகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோயில் அறக்கட்டளை நிா்வாகத்தினா் அனுப்பிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜ், பரமத்தி கோட்டையண்ண சுவாமி கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு அப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல் குண்டுகளைப் பாா்வையிட்டாா். நில சீரமைப்பு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது, பரமத்தி வேலூா் வட்டாட்சியா் சுந்தரவள்ளி,கோட்டையண்ணசு வாமி கோயில் நிா்வாக அறங்காவலா் குழுவினா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT