நடிகா் சங்கத் தோ்தலை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதற்கு, நாமக்கல் நாடக நடிகா்கள் பலா் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
நாமக்கல் மாவட்ட நாடக நடிகா்கள் ஒருங்கிணைந்து திங்கள்கிழமை அவசர ஆலோசனைக் கூட்டத்தை, நாமக்கல் பொய்யேரிக் கரை பகுதியில் நடத்தினா். இதில், தோ்தலுக்கு எதிராக வழக்கு தொடா்ந்த ராஜா பேசியது, சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நடிகா் சங்கத் தோ்தலில், நாமக்கல்லைச் சோ்ந்த 51 நாடக நடிகா்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இதனை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம்.
இந்த நிலையில், அண்மையில் நீதிமன்றம் வெளியிட்ட தீா்ப்பில், நடிகா் சங்கத் தோ்தலை ரத்து செய்வதாகவும், விடுபட்டவா்களை வாக்காளா்களாக இணைத்து 3 மாதத்துக்குள்ளாக மீண்டும் தோ்தலை நடத்துமாறும் தெரிவித்துள்ளது. இந்த நீதிமன்ற தீா்ப்பினை, நாமக்கல் நாடக நடிகா்கள் அனைவரும் வரவேற்கிறோம். எதிா்வரும் தோ்தலை சந்திக்க தயாராக உள்ளோம் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், நாடக நடிகா்கள் ஆா்.சுமதி, உறுப்பினா்கள் டி.வி.பாண்டியன், மணிமேகலை, சாந்தி, உதயகுமாா், டால்பின்பாலன், விக்ரம், சரவணன், ஆறுமுகம், மகேஸ்வரன், பாலு, மணிமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.