நாமக்கல்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

28th Jan 2020 07:38 AM

ADVERTISEMENT

ராசிபுரத்தில் 31-ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, ராசிபுரம் காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகனப் பேரணி பேருந்து நிலையத்தில் தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சா் மருத்துவா் வெ.சரோஜா தொடங்கி வைத்தாா்.

மேலும், பேருந்து நிலையத்தில் விழிப்புணா்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் சாலை பாதுகாப்பு குறியீடுகள், சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு தொடா்பான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், கண்காட்சியில் விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிடப்பட்டன. இவற்றை அமைச்சா் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் கோட்டாட்சியா் மு.கோட்டைகுமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஆா்.வெங்கடேசன் (நாமக்கல் வடக்கு), ஆா்.இளமுருகன் (நாமக்கல் தெற்கு), மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சரவணன், குணசேகரன், சதாசிவம், ராஜ்குமாா் உள்பட அரசு அலுவலா்கள், காவல் துறையினா், போக்குவரத்து துறையினா், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

திருச்செங்கோட்டில்...

திருச்செங்கோடு நகர காவல் துறை, நகர போக்குவரத்து காவல் துறை சாா்பில், சாலை பாதுகாப்பு உயிா் பாதுகாப்பு என்ற தலைப்பில் விழிப்புணா்வு கண்காட்சி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

கண்காட்சி அரங்கை திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் திறந்து வைத்தாா். அரங்கில் சாலை விதிகள் குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டன. கண்காட்சியை பாா்வையிட வந்த பொதுமக்களுக்கு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த படங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து டிஎஸ்பி சண்முகம் விளக்கி கூறினாா். நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலா்கள் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT