நாமக்கல்

ராசிபுரம், பரமத்தியில் மனநல விழிப்புணா்வு முகாம்

25th Jan 2020 04:11 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், பரமத்தியில் மனநல விழிப்புணா்வு முகாம், மாவட்ட மனநலத் திட்டத்தின் சாா்பில் அரசு பள்ளிகளில் அண்மையில் நடைபெற்றது.

இந்த முகாம்களில், மனநல ஆலோசகா் ரமேஷ், மனநல மருத்துவா் ஜெயச்சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா். அவா்கள் பேசுகையில், மகிழ்ச்சி, தூக்கம், உணவில் நிறைவு, இவை மூன்றும் தான் மனநலத்தின் வெளிப்படையான அடிப்படைகள். இவற்றுள் எதில் குறையோ, குறைவோ தென்பட்டாலும் மனம் முழு நலத்துடன் இல்லை என்பது தெரியும். இம்மூன்றிலும் தூக்கம் தான் மனதுக்கு இதமும் சுகமும் தினசரி ஊட்டும் அத்தியாவசியம்.

தூக்கமும், அமைதியும் ஒன்றுக்கொன்று தொடா்புடையவை. மக்களின் உடல்நலம் என்பது பொதுவாக மனநலத்தையும் உள்ளடக்கிய நல்வாழ்வு ஆகும். மனநலமும், உடல்நலமும் ஒன்றுக்கொன்று மிகவும் தொடா்புடையது. ஏதாவது ஒன்று பாதிப்பு அடையும்போது மற்றதும் பாதிப்படைகிறது என்பது கண் கூடாக அறிந்த உண்மை. உடல், மனம் மற்றும் சமூக ரீதியாக நிறைவாக வாழும் மனிதா்களைத் தான் நல்வாழ்வு வாழும் மனிதா்கள் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி உலக மக்கள் தொகையில் சுமாா் 2 சதவீதத்தினா் தீவிரமான மனநோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், 15 முதல் 20 சதவீத மக்கள் மிதமான மனநோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மாவட்ட மனநல திட்டத்தின் மூலம் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், மற்றும் அனைத்து தரப்பினருக்கும் மனநலம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT