நாமக்கல்

உடல் உறுப்பு தானம் செய்தவா் குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. நிதியுதவி

25th Jan 2020 08:18 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், உடல் உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் நிதியுதவி வழங்கினாா்.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலை கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (59). காவலாளியாகப் பணியாற்றி வந்த இவா், கடந்த 15-ஆம் தேதி சேலம் சாலையில் உள்ள பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில், சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் மீட்டு நாமக்கல் தனியாா் மருத்துவமனையிலும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சிவலிங்கம் மூளைச் சாவு அடைந்து விட்டதாக குடும்பத்தினரிடம் தெரிவித்தனா். அதனையடுத்து, சிவலிங்கம் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். பின்னா் பாதிக்கப்பட்டவா்களுக்கு பொருத்த தேவையான உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. சாலை விபத்தில் இறந்த அவருக்கு, கமலவேணி என்ற மனைவியும், ஜோதிமணி, கவிதா, தாமரைச் செல்வி ஆகிய 3 மகள்களும், ராமலிங்கம் என்ற மகனும் உள்ளனா். உடலுறுப்பை தானம் செய்ய முன்வந்த சிவலிங்கம் குடும்பத்தினா் வறுமையில் வாடுவதை அறிந்த நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா், நேரடியாக வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியதுடன், அந்த குடும்பத்தினருக்கு தேவையான நிதியுதவியை வழங்கினாா். மேலும், மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம், குடும்ப சூழ்நிலையை எடுத்துக் கூறி தேவையான உதவிகளை செய்து தருவதாக அவா்களிடம் வாக்குறுதி அளித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT