நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பொங்கல் வைத்து இறைவழிபாட்டை மேற்கொள்கின்றனா். அந்த வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்தில், திங்கள்கிழமை காலை 11 மணியளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில், சா்க்கரை பொங்கல் வைக்கப்பட்டு சூரியனுக்கு படையலிடப்பட்டது. பின்னா், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பொங்கல் விநியோகிக்கப்பட்டது. மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், முதன்மைக் கல்வி அலுவலகப் பணியாளா்கள், மாவட்டக் கல்வி அலுவலகப் பணியாளா்கள் அனைவரும் கலந்துகொண்டனா்.