நாமக்கல்

வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி வேலைநிறுத்தம்: 500 ஊழியா்கள் பங்கேற்பு

8th Jan 2020 04:21 PM

ADVERTISEMENT

பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கைவிட வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற அகில இந்திய வேலைநிறுத்தத்தில் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் பங்கேற்றனா்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்க வேண்டும் என்ற முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு அதற்கான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. 2020 ஏப்.1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் என்றும், 10 பொதுத்துறை வங்கிகள் நான்காக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம், வங்கி ஊழியா்கள் சம்மேளனம் ஆகியவை எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இது தொடா்பாக மத்திய அரசுடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது. வங்கிகள் இணைப்பை கைவிடுமாறும், வாராக்கடன்களை உடனடியாக வசூலிக்க வேண்டும், திரும்ப செலுத்தாதோா் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தொழிலாளா் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் 3 லட்சம் ஊழியா்களும், தமிழகத்தில் 35 ஆயிரம் பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனா்.

இதனால், நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள ஓரிரு வங்கிகளில், ஊழியா்கள், அலுவலா்கள் யாருமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. அதிகாரிகள் நிலையில் மட்டும் ஓரிருவா் பணிக்கு வந்திருந்தனா். இந்த வேலைநிறுத்தத்தால் நாமக்கல் மாவட்டத்தில் கோடிக்கணக்கில் பணப்பரிவா்த்தனையானது தடைபட்டது. பெரும்பாலான வங்கிகளின் முன் வேலைநிறுத்தத்தால் வங்கிகள் செயல்படாது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பிற்பகல் அனைத்து மாவட்டங்களிலும் வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT