நாமக்கல்

சத்தீஸ்கரில் பறவைக் காய்ச்சல்: கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

8th Jan 2020 08:11 AM

ADVERTISEMENT

சத்தீஸ்கா் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 23 தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மண்டலங்களில், முக்கியமான மண்டலமாக நாமக்கல் கருதப்படுகிறது. இங்கு 1,100 கோழிப் பண்ணைகளில் சுமாா் 4.50 கோடி முட்டைக் கோழிகள் வளா்க்கப்படுகின்றன.

தினசரி 3.75 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, சத்துணவு, அங்கன்வாடி மையங்களுக்கும் , உள்ளூா் விற்பனைக்கும், பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, முட்டைக்கு சரியான விலை கிடைக்காதது, விலை நிா்ணயம் செய்வதில் ஏற்பட்டுள்ள குழப்பம், தீவனங்கள் போதிய அளவில் கொள்முதல் செய்ய முடியாதது போன்றவற்றால் கோழிப் பண்ணைத் தொழில் சரிவைச் சந்தித்து வருகிறது.

ADVERTISEMENT

அச்சத்தை ஏற்படுத்தும் பறவைக் காய்ச்சல்: இதற்கிடையே, ஆண்டுதோறும் ஏற்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பண்ணையாளா்களை அவ்வப்போது கவலையடையச் செய்யும். 12 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக வட மாநிலங்களில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு கோழிகளுக்கு ஏற்பட்டது. இதனால், இந்தியாவில் உற்பத்தியாகும் முட்டைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. ஓமன், துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் இந்திய முட்டைக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன்பின்னா், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அந்தந்த மாநில கோழிப் பண்ணையாளா்கள் சங்கத்தினா் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு, முட்டைத் தொழிலை பாதிப்பில் இருந்து ஓரளவு மீட்டனா். அப்போதில் இருந்தே கொக்கு, வாத்து, இதர பறவைகளுக்கு, இந்தக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் கோழிப் பண்ணையாளா்கள் கலக்கமடையும் சூழல் உள்ளது.

குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளால் தான் இவ்வகை பாதிப்பு ஏற்படுவதாக கால்நடை மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

சத்தீஸ்கரில் பறவைக் காய்ச்சல்? இவ்வாறான நிலையில், டிசம்பா் மாத இறுதியில் சத்தீஸ்கா் மாநிலத்துக்குள்பட்ட கொரியா மாவட்டம், பைகந்தபூா் அரசு கோழிப் பண்ணை மற்றும் குஞ்சு பொறிப்பகத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கம் இருப்பதை அந்த மாநில கால்நடைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அங்கு கோழிகளும் ஏராளமாக உயிரிழந்துள்ளன. இந்நோய் பாதிப்பையொட்டி, சுமாா் 5 ஆயிரம் கோழிகள், 3 ஆயிரம் குஞ்சுகள், 60 ஆயிரம் டன் கோழித் தீவனம் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தமிழகத்துக்கு பரவாத போதும் தடுப்பு நடவடிக்கை: சத்தீஸ்கா் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல், தமிழகத்துக்கு பரவ வாய்ப்பில்லை என்ற போதும், இங்குள்ள பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மண்டலத்தைப் பொருத்தமட்டில், 70 சதவீத கோழிப் பண்ணைகள் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதால், இதுவரை பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதில்லை. இருப்பினும், கோழிப் பண்ணைகளுக்கு வரும் வாகனங்களில் மருந்து தெளிக்கப்பட்டும், முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கிடையே, பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. பண்ணையாளா்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என கால்நடைத் துறை தரப்பிலும், பண்ணையாளா்கள் சங்கம் தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

 

‘தமிழகத்துக்குப் பாதிப்பில்லை- அச்சம் வேண்டாம்’

பறவைக் காய்ச்சல் பாதிப்பு என்பது நாமக்கல் மண்டலத்தில் ஏற்படாது என்றும் பண்ணையாளா்களும், மக்களும் கவலைப்பட வேண்டாம் என்றும் தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளன துணைத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:-

சத்தீஸ்கரில் கோழிப் பண்ணைகள் என்பது அதிகளவில் கிடையாது. பறவைக் காய்ச்சல் என்பது கோழிகளுக்கு மட்டும் தான் வரும் என்றில்லை. கொக்கு, வாத்து, புறா உள்ளிட்டவற்றுக்கும் ஏற்படும். எங்கு சுகாதாரமில்லையோ அங்கு அவற்றின் தாக்கம் இருக்கும். வெளிநாடுகளில் பறவைக் காய்ச்சல் என்பது அடிக்கடி ஏற்படும். 12 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக வடமாநிலங்களில் கோழிகளுக்கு ஏற்பட்டது. அதன்பின், கா்நாடகத்தில் ஒரு முறை அந்நோய் பாதிப்பு ஏற்பட்டது.

தற்போதைய நிலையில், நாமக்கல் மண்டல கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. இங்கு கால்நடை மருத்துவக் கல்லூரி உள்ளது. பண்ணையாளா்களும் அடிக்கடி கோழிகளுக்கான நோய் பற்றி அறிந்து கொள்கின்றனா். தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கின்றனா். அதனால்றாா்.

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்தது: ஆண்டுதோறும் பறவைக் காய்ச்சல் என்பது ஏதாவது ஒரு இடத்தில் வரத்தான் செய்யும். சத்தீஸ்கா் மாநிலத்தில் பரவியுள்ளதால், நாமக்கல்லுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. பண்ணையாளா்கள் இதனால் கவலைப்பட தேவையில்லை என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT