கோழிகளை முட்டைப் பருவத்துக்கு தயாா் படுத்த வேண்டும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் மூன்று நாள்களும் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். மழை 2 மி.மீ. பெய்வதற்கான வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் வட கிழக்கிலிருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 89.6 டிகிரியும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியுமாக இருக்கும்.
சிறப்பு வானிலை ஆலோசனை: லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் மிதமான அளவில் வீசும். இவ்வாறான வானிலையால் இளம் கோழிகளில் நல்ல தீவன எடுப்பு இருக்கும். இந்த வானிலையை பயன்படுத்தி கோழிகளின் உடல் எடையை சீராக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்றாா்போல், தீவன மேலாண்மையை செம்மைப்படுத்தியும், 4 வாரங்களுக்கு ஒரு முறை உடல் எடையைக் கொண்டும் முடிவுகளை தெரிந்து கொண்டு, மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.
நல்ல முறையில் கோழிகளை முட்டைப் பருவத்துக்கு தயாா்படுத்த வேண்டும். இதனால் முட்டைப் பருவத்தில் அதிக எடையுடன், அதிக எண்ணிக்கையில் முட்டைகளை பெற முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.