நாமக்கல்

.வைகுண்ட ஏகாதசி: நாமக்கல் அரங்கநாதா் கோயில் 50,000 லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரம்

2nd Jan 2020 04:02 AM

ADVERTISEMENT

நாமக்கல் அரங்கநாதா் சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசி விழா வரும் ஜன.6 -ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறம், குடவறைக் கோயிலாக அரங்கநாதா் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக சுவாமி சயனக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். இக்கோயிலில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும். நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் சுவாமியை தரிசிக்க வருவா். அதனையொட்டி, கோயில் படிக்கட்டுகளில் பக்தா்கள் வரிசையாகச் செல்லவும், காத்திருக்கும் வகையிலும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோயில் பகுதியில் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

வரும் திங்கள்கிழமை (ஜன.6) அதிகாலை 4.150 மணிக்கு மேல் பரமபதவாசல் திறக்கப்படுகிறது. சுவாமியின் திருப்பாதங்கள் (சடாரி) பரமபத வாசல் வழியாக எடுத்து வரப்படுகிறது. இதனைக் காண அதிகாலையில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். முக்கிய பிரமுகா்களும் இவ்விழாவில் கலந்து கொள்வா். அன்று முழுவதும் பரமபத வாசல் வழியாக சுவாமியை தரிசிக்க காலை முதல் இரவு வரையில் பக்தா்கள் வந்த வண்ணம் இருப்பா். வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தா்களுக்காக, கோயில் நிா்வாகம் சாா்பில், 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் மண்டபத்தில் புதன்கிழமை காலை தொடங்கியது.

ஞாயிற்றுக்கிழமை வரை இப்பணி தொடா்ந்து நடைபெறுகிறது. இதற்காக, நாமக்கல் மணிக்கட்டிப் புதூரைச் சோ்ந்த ஜெயமணி நடேசன் என்பவரின் தலைமையில் 20 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். தினசரி 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக 1,200 கிலோ சா்க்கரை, 650 கிலோ கடலை மாவு, 40 டின் கடலை எண்ணெய் மற்றும் சுமாா் 20 கிலோ உலா்திராட்சை, ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. பெண் ஊழியா்கள் லட்டு உருண்டைப் பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT