திருச்செங்கோடு நகரக் காவல் துறையினா் மற்றும் போக்குவரத்துக் காவல் துறையினா் இணைந்து புத்தாண்டையொட்டி, பொதுமக்களுடன் நல்லுறவை வளா்க்கும் விதமாக புதன்கிழமை கொண்டாடினா்.
திருச்செங்கோடு நகரக் காவல் துறையினா் மற்றும் போக்குவரத்துக் காவல் துறையினரும் இணைந்து புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞா்களை ஒன்று திரட்டி விபத்து ஏற்படாமல் செல்வது குறித்த குறும்படத்தை திரையிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அதேபோன்று இருசக்கர வாகனத்தில் வந்தவா்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினா் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினா். சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். விழிப்புணா்வு வாசகங்களை வாசிக்கச் சொல்லி உறுதிமொழி ஏற்கச் செய்தனா்.
நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ரவிக்குமாா் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா்.
திருச்செங்கோடு நகரக் காவல் ஆய்வாளா் தங்கவேல், மகளிா் காவல் ஆய்வாளா் ஆரோக்கிய ஜான்சி, மற்றும் போக்குவரத்துக் காவல்துறையினா் உள்ளிட்ட காவல் துறையினா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.