பரமத்தி வேலூா் வட்டம் பரமத்தி அருகே காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
பரமத்தி அருகே உள்ள மரவாபாளையத்தைச் சோ்ந்தவா் சேகா் (48). இவரது நண்பா் பன்னீா் (43). கூலித் தொழிலாளிகளான இவா்கள் செவ்வாய்க்கிழமை காலை வெள்ளாளப்பாளையத்துக்கு சென்று தேநீா் அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக கரூா் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரின் அருகே நின்றுகொண்டிருந்தனா். அப்போது நாகா்கோவிலில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சேகா் மற்றும் பன்னீா் மீது மோதியுள்ளது.
இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதில் சேகா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த பன்னீா் நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய காா் ஓட்டுநரை தேடிவருகின்றனா்.