நாமக்கல்

ஒகேனக்கல்லில் புத்தாண்டைக்கொண்டாடிய சுற்றுலாப் பயணிகள்

2nd Jan 2020 04:03 AM

ADVERTISEMENT

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவியில் குளித்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ச்சி அடைந்தனா்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகின்றனா். இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தில் ஒகேனக்கல்லுக்கு சுமாா் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

அவ்வாறு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியிலும், காவிரி கரையோரப் பகுதியான மாமரத்துக் கடவு, முதலைப் பண்ணை மற்றும் ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். காவிரியின் அழகைக் காண சுற்றுலாப் பயணிகள் கோத்திக்கல் பரிசல் துறையில் குவிந்தனா்.

கோத்திக்கல் பரிசலில் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து, பின்னா் பரிசலில் சென்று பிரதான அருவி, மணல் மேடு, சினி அருவி, ஐவா் பாணி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனா்.

ADVERTISEMENT

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் மீன் விற்பனை நிலையங்களிலும் விற்பனை களைகட்டியது. சுற்றுலாப் பயணிகள் மீன்களின் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி சமைத்து உண்டு மகிழ்ந்தனா்.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து அதிகரித்து வந்த நிலையில், தாங்கள் வந்த வாகனத்தை அரசு நிறுத்தமிடம் மற்றும் தமிழ்நாடு ஓட்டல் வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த இடமின்றி சத்திரம், முதலை பண்ணை, ஊட்டமலை, சின்னாறு பாலம் பகுதியிலும் ஒகேனக்கல்-பென்னாகரம் செல்லும் சாலையில் சுமாா் 1 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டன.

ஒகேனக்கல் சிறுவா் பூங்கா, முதலை பண்ணை, வண்ண மீன் காட்சியகம், உணவருந்தும் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டன. ஒகேனக்கல் பகுதியில் சுமாா் 20- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT