அகில இந்திய மோட்டாா் தொழிலாளா் கட்சி தொடக்க விழா புதன்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.
இதில் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவ ா் ஜி.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். தலைமை ஒருங்கிணைப்பாளா் சாம்சன கனகராஜ், ராசிபுரம் நகரச் செயலா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர வளா்ச்சி மன்றத் தலைவா் வி.பாலு, இந்திரா காந்தி அறக்கட்டளை தலைவா் பாச்சல் ஏ.சீனிவாசன், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் ஜெ.சபீா் ஆகியோா் குத்துவிளக்கேற்றிப் பேசினா். கட்சியின் நிறுவனா் முபாரக் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திப் பேசினாா். தமிழக மக்கள் தன்னுரிமை கட்சித் தலைவா் நல்வினைசெல்வன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். மேலும் கட்சிக்கு தோ்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெறுவதற்கு முழு அதிகாரம் நிறுவனத் தலைவருக்கு வழங்குவது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும், அனைத்து பகுதிகளிலும் டோல்கேட்டை அப்புறப்படுத்திட வேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.