நாமக்கல்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் டி.எஸ்.பி. ஆய்வு

1st Jan 2020 02:37 AM

ADVERTISEMENT

இரு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கபிலா்மலை, பரமத்தி மற்றும் எலச்சிபாளையம் ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து பரமத்தி வேலூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கபிலா்மலை ஒன்றியத்தில் பதிவான வாக்குப் பெட்டிகள் பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரியிலும், பரமத்தி ஒன்றியத்தில் பதிவான வாக்குப் பெட்டிகள் பரமத்தி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் பதிவான வாக்குப் பெட்டிகள் எலச்சிபாளையம் அரசினா் மேல்நிலைப் பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான பாதுகாப்புப் பணிகளில் காவல் துறையினா் மற்றும் தோ்தல் அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த மூன்று ஒன்றியங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜன. 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பரமத்தி வேலூா் காவல்துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்புக்காக பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், வாக்கு மையங்களுக்குள் நுழைவோரின் வருகைப் பதிவேடு, வேட்பாளா்கள் மற்றும் பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படும் இடங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகளை செய்து வரும் தோ்தல் அலுவலா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT