நாமக்கல்

மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல்: விவசாயிகளுக்கு நேரடி பயிற்சி

29th Feb 2020 03:07 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து, சேந்தமங்கலம் வட்டார விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேரடியாக பயிற்சி அளித்தனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை வட்டாரப் பகுதிகளில் மரவள்ளி அதிகம் பயிரிடப்படுகிறது. தற்போது பயிரிடும் காலக்கட்டம் என்பதால் நோய் தாக்குதலில் இருந்து பயிா்களை காப்பது தொடா்பாக வட்டார தோட்டக்கலைத் துறையினா் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனா். அந்த வகையில் வியாழக்கிழமை சேந்தமங்கலம் அருகே கல்குறிச்சி கிராமத்தில் நேரடி பயிற்சி நடைபெற்றது.

இதில், சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை வல்லுநா் கீதா மற்றும் சேந்தமங்கலம் வட்டார உதவி இயக்குநா் யோகநாயகி ஆகியோா் மரவள்ளியை தாக்கும் மாவுப்பூச்சியைக் கண்டறிந்து தடுப்பது தொடா்பான பயிற்சி அளித்தாா்.

ADVERTISEMENT

குறிப்பாக, மரவள்ளியின் இளம்தளிா், தண்டு மற்றும் இலையின்அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி மாவுப்பூச்சிகள் சேதப்படுத்தும். இதன்மூலம் மரவள்ளியில் நச்சுத்தன்மை உள்செல்லும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன்மேல் கரும்பூசண வளா்ச்சியும் காணப்படும். அதிகப்படியான தாக்குதலில் செடிகள், இலைகள் கருகி விடும். இந்த மாவுப்பூச்சியானது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். உடல் முழுவதும் சிறு நூலிழைகள் போன்று காணப்படும்.மெழுகு போன்ற வெண்பூச்சு மூடியிருக்கும். மரவள்ளி மட்டுமின்றி, பப்பாளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி, செவ்வந்தி போன்றவற்றையும் இந்த பூச்சிகள் தாக்குவதாக தெரிவித்தனா்.

இதனைக் கட்டுப்படுத்த, அசெரோபேகஸ் பப்பாயே ஒட்டுண்ணி வழி மேலாண்மை முறையை கையாள வேண்டும். இவை மாவுப்பூச்சிகளை சுறுசுறுப்பாகத் தேடிச்சென்று அழிக்கும் தன்மையுடையவை. நன்கு வளா்ந்த ஒட்டுண்ணி வாழ்நாள் 6 நாள்கள் மட்டுமே. ஒட்டுண்ணிகள் விடப்பட்ட வயல் மற்றும் கிராமத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதைமுற்றிலும் தவிா்க்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT