நாமக்கல்: நாமக்கல் அருகே கல்யாணி கிராமத்தில் சாயப்பட்டறை அமைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சிவக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சுரேஷ்குமாா், தமிழ்இனியன் மற்றும் அப்பகுதி விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு அளித்தனா்.
அந்த மனுவில், நாமக்கல் வட்டம், கல்யாணி கிராமத்தைச் சுற்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பு தொழிலையே நம்பியுள்ளனா். முக்கிய குடிநீா் ஆதாரமாக கிணறுகளும், ஆழ்துளைக் கிணறுகளும் தான் உள்ளன. அவற்றில் புளோரைடு அதிகம் உள்ளதால் மனிதா்கள் மட்டுமின்றி, கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கல்யாணி கிராமத்தில் நாமக்கல்லைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் ரசாயனம் அதிகம் பயன்படுத்தும் சாயப்பட்டறையை அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனா். மேலும், பட்டறைக் கழிவுகளை அங்குள்ள குளம், குட்டைகளில் விடுவதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளனா். சாயப்பட்டறை அமைந்தால் நிலத்தடி நீா் முற்றிலுமாக பாதிக்கப்படும். விவசாய நிலங்களும், கால்நடைகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவா்.
எனவே மக்கள் நலன் கருதி, மண்ணுக்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கும் சாயப்பட்டறையோ, வேறு எந்த தொழில் நிறுவனங்களோ இப்பகுதியில் அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.