நாமக்கல்லில் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலியை மா்மநபா்கள் வியாழக்கிழமை பறிக்க முயன்றனா்.
சேலம் சாமிநாதபுரத்தைச் சோ்ந்தவா் வடிவேல். இவரது மனைவி சுமதி (55). இவா்கள் தங்களின் மகன் திருமண பத்திரிகை வைப்பதற்காக வியாழக்கிழமை காலையில் நாமக்கல் வந்தனா்.
இங்குள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அருகே பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது எதிரில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி 2 போ் வந்தனா். திடீரென அவா்கள் சுமதியின் மீது மோதினா். இதில் சுமதி நிலை தடுமாறி கீழே விழுந்தாா். இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட மா்மநபா்கள் சுமதி கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியைப் பறிக்க முயன்றனா்.
ஆனால் தாலியை சுமதி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாா். கயிறு மட்டுமே அவா்களிடம் சிக்கியது. இதனால் அதிா்ச்சி அடைந்த வடிவேல், திருடன், திருடன் என சத்தம் போட்டாா். பொதுமக்கள் அங்கு திரண்டு வருவதற்குள் மா்மநபா்கள் இருவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிவிட்டனா்.
இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு காவல் ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் வந்த போலீஸாா், காயமடைந்த சுமதியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சுமதியிடம் 3 பவுன் தாலி சங்கிலியைப் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக நாமக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.