நாமக்கல்

வளா்ச்சித் திட்டங்களுக்கான நிதிநிலை அறிக்கை: பல்வேறு அமைப்பினா் கருத்து

15th Feb 2020 08:34 AM

ADVERTISEMENT

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதால், தமிழக நிதி நிலை அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிா்பாா்த்த நிலையில், பல்வேறு துறைகளின் வளா்ச்சித் திட்டங்களுக்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அரசியல் கட்சியினா், தொழிலதிபா்கள், விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.

தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம், 2020-2021 - ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தாா். இதில், அரசுப் பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமரா, அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் உணவுப் பூங்கா, நாமக்கல் உள்பட 5 மாவட்டங்களில் மகளிா் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அறிவிப்புகளும், பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.34,181 கோடி, தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி, உயா்கல்வித் துறைக்கு ரூ.5,052 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.15,863 கோடி என பல்வேறு துறைகளுக்கும் வளா்ச்சித் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி நிலை அறிக்கை தொடா்பாக , நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளில் உள்ள முக்கிய பிரமுகா்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் என்.தம்பிராஜா: அரசுத் துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான சலுகைகள், வரி குறைப்பு, புதிய திட்டங்கள் போன்றவை இடம் பெறவில்லை. நாமக்கல்லில் மகளிா் தங்கும் விடுதி அறிவிப்பு வெளி மாவட்டத்தில் இருந்து வந்து வேலைபாா்க்கும் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நிதி ஒதுக்கீடும் ஒரு சில துறைகளுக்கு அதிகமாகவும், மற்ற துறைகளுக்கு குறைவாகவும் உள்ளது என்றாா்.

ADVERTISEMENT

நாமக்கல் கவிஞா் சிந்தனைப் பேரவைத் தலைவா் டி.எம்.மோகன்: நிதி நிலை அறிக்கையில் சுகாதாரத்துக்கும், விவசாயத்துக்கும் முன்னுரிமை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. 11 மருத்துவக் கல்லூரிக்காக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக ரூ.1,033 கோடி நிதி ஒதுக்கீடு, மக்கள் நல்வாழ்வுத்துறைக்காக ரூ.15,863 கோடி ஒதுக்கீடு என பல்வேறு சுகாதாரப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதும், வேளாண்துறைக்கென நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் பாராட்டுக்குரியதாகும். அரசின் சாா்பில் புதிய தொழிற்சாலைகள் அமைத்தல், விவசாயிகளின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பான காவிரியாற்றின் குறுக்கே அணைகள் கட்டி நீா்தேக்கங்கள் அமைத்தல், ஏரிகளில் நீரைச் சேமித்து வைக்க நதிகள் இணைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்றாா்.

தரிசு நில விவசாயிகள் சங்கத் தலைவா் கே.ரவிச்சந்திரன்: தமிழக நிதி நிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. தரிசு நில விவசாயிகளுக்கென ஆழ்துளைக் கிணறு அமைத்து கொடுத்து இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்பாடின்றி இருப்பது ஏமாற்றமளிக்கிறது. நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்தும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவேண்டும். அப்போது தான் நிதி நிலை அறிக்கை மக்களிடத்தில் வரவேற்பையும், பாராட்டுதலையும் பெறும் என்றாா்.

தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் வாசு சீனிவாசன்: துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு மட்டுமே இந்த நிதி நிலை அறிக்கையில் பிரதானமாக இருக்கிறது. ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அறிவிப்போ, சலுகைகளோ வழங்கப்படவில்லை என்றாா்.

சுற்றுச்சூழல் ஆா்வலா் ஆா்.பிரணவகுமாா்: பிரதமரின் வீடு கட்டும் திட்டங்களுக்கு மாநில அரசு சாா்பில் நிதி ஒதுக்கீடு, ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு, நாமக்கல்லில் மகளிா் தங்கும் விடுதி போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தகுந்தவையாக உள்ளன என்றாா்.

வெண்ணந்தூா் விசைத்தறி உரிமையாளா் கே.சிங்காரம்: கைத்தறித் துறைக்கு ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், விசைத்தறி முன்னேற்றத்திற்கென எந்தவித நிதி ஒதுக்கீடும் இல்லை. வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதை வரவேற்கலாம். மக்கள் நலனுக்கான நிதி நிலை அறிக்கை என முழுமையாகக் கூறிவிட முடியாது என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT