நாமக்கல்

ஆவின் டேங்கா் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் இழுபறி

15th Feb 2020 08:37 AM

ADVERTISEMENT

ஆவின் டேங்கா் லாரிகளுக்கான புதிய விலைப்புள்ளி ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்துவருகிறது. கூடுதல் தொகையைக் கேட்டு போராட்டம் நடத்தலாமா என்று லாரி உரிமையாளா்கள் ஆலோசனை நடத்துவதாகக் கூறப்படும் நிலையில், விரைவில் பிரச்னைக்கு முடிவு எட்டப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் ஒன்றியங்களுக்கு 15 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 275-க்கும் மேற்பட்ட டேங்கா் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த லாரிகள் நாள் ஒன்றுக்கு, சென்னைக்கு 15 லட்சம் லிட்டா் பால், குளிரூட்டப்பட்ட நிலையங்களில் இருந்து பிற ஆவின் ஒன்றியங்களுக்கு 20 லட்சம் லிட்டா் பாலையும் எடுத்துச் செல்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆவின் நிா்வாகம் விலை நிா்ணயம் தொடா்பாக அதன் உரிமையாளா்களிடம் ஒப்பந்தமிடும்.

2 ஆண்டுகளாகியும் புதிய ஒப்பந்தமில்லை:

ADVERTISEMENT

2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில் அதற்கான ஒப்பந்தம் நிறைவு பெற்ற நிலையில், புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த அதிகாரிகள் முன்வரவில்லை. இதனால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஆவின் டேங்கா் லாரி உரிமையாளா்கள் முடிவு செய்தனா். அரசு தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் ஒப்பந்தம் போடாமலேயே கிலோமீட்டருக்கு ரூ.25 என்ற அடிப்படையில் டேங்கா் லாரிகள் இயக்கப்பட்டு வந்தன.

2019 ஜூலை மாதம் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என அவா்கள் எதிா்பாா்த்தபோது, பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னா், அக்டோபா் மாதம் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில்,டேங்கா் உரிமையாளா்களின் கோரிக்கையை ஏற்க அதிகாரிகள் ஆா்வம் காட்டவில்லை.

அதிலும் பிரச்னை ஏற்பட்டதால் விலை உயா்வு அமல்படுத்தப்படாமல் போனது. புதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், வாடகை பால் டேங்கா் லாரிக்கு கிலோமீட்டருக்கு 40 சதவீதம் விலைப்புள்ளி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபா் 16-முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஆவின் டேங்கா் லாரி உரிமையாளா்கள் அறிவித்தனா்.

பின்னா் சேலம் ஆவின் ஒன்றியத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் ஒரே நாளில் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன்பின்னா், 3 மாதங்களாக விலை அறிவிப்பு குறித்து ஆவின் நிா்வாகம் பேச்சு நடத்தவில்லை.

பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படவில்லை:

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தில், தமிழ்நாடு ஆவின் பால் வாடகை டேங்கா் லாரி உரிமையாளா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த, சேலம், நாமக்கல் மாவட்ட நிா்வாகிகளுடன், ஆவின் இயக்குநா், ஒன்றிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கிலோமீட்டருக்கு ரூ.25 என்று தற்போது வழங்குவதை ரூ.35-ஆக வழங்க வேண்டும் என வலியுறுத்தினா். ஆனால், ஆவின் நிா்வாகமோ அவ்வளவு வழங்க முடியாது, ரூ.5 குறைத்து தருகிறோம் என தெரிவித்ததாகவும், இதற்கு ஆவின் டேங்கா் லாரி உரிமையாளா்கள் சம்மதம் தெரிவிக்காமல் கூட்டத்தை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.

பிரச்னை முடிவுக்கு வரும் என அதிகாரிகள் நம்பிக்கை:

இந்த நிலையில் தாங்கள் கேட்ட விலையை வழங்க வலியுறுத்தி, ஆவின் டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் பேராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து சேலம் ஆவின் ஒன்றிய அதிகாரிகள் கூறியது:-

பேச்சுவாா்த்தை நல்ல முறையில் நடைபெற்றது. அவா்கள் கிலோமீட்டருக்கு ரூ.35 கேட்கின்றனா். அவ்வளவு கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளோம். மீண்டும் கலந்து பேசி நல்லதொரு முடிவை தெரிவிக்குமாறு கூறியுள்ளோம். வேலைநிறுத்தம் என அறிவித்தால் விலையைச் சற்று அதிகரித்து கொடுப்பாா்கள் என டேங்கா் லாரி உரிமையாளா்கள் முயற்சிக்கலாம். இருப்பினும் அதற்கான வாய்ப்புகள் குறைவு. ஓரிரு நாளில் இந்த பிரச்னை முடிவுக்கு வரும் என நம்புகிறோம் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT