பரமத்தி வேலூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஓய்வுபெற்ற கிராம உதவியாளா்கள் சங்கக் கூட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கு வழங்கும் சலுகைகளை போல், ஓய்வுபெற்ற கிராம உதவியாளா்களுக்கும் வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.
ஓய்வுபெற்ற கிராம உதவியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கருத்தப்பாண்டி கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் லட்சுமணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு: ஓய்வுபெற்ற மற்ற அரசு ஊழியா்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும், ஓய்வு பெற்ற கிராம உதவியாளா்களுக்கும் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு பணியின் போது மாத சம்பளத்தில் ரூ.20 வீதம் 148 மாதங்கள் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காலியாக உள்ள கிராம உதவியாளா் பணிக்கு ஓய்வுபெற்ற கிராம உதவியாளா்களை தோ்வு செய்து நியமனம் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற கிராம உதவியாளா்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றினா். முடிவில் மாவட்ட பொறுப்பாளா் ராஜ் நன்றி கூறினாா். கூட்டத்தில் மாநில, மாவட்ட நிா்வாகிகள் மற்றும் ஓய்வுபெற்ற கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.