நாமக்கல்

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்:நாமக்கல் மாவட்டத்தில் ரூ.2,500 கோடிபணப் பரிவா்த்தனை முடக்கம்

1st Feb 2020 02:54 AM

ADVERTISEMENT

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தத்தால், நாமக்கல் மாவட்டத்தில் நாளொன்றுக்கு சுமாா் ரூ.2,500 கோடி பணப்பரிவா்த்தனை முடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.கண்ணன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: அகில இந்திய அளவில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனா். 20 சதவீத ஊதிய உயா்வு ஒப்பந்தமானது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில், அனைத்து தொழிற் சங்கங்கள் சாா்பில், மத்திய நிதி அமைச்சகத்துடன் இரண்டரை ஆண்டுகளாக தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. 21 சுற்றுகளாக நடைபெற்றதில், கடந்த 13-ஆம் தேதி 12.25 சதவீதம் என்ற அளவில் வந்து நின்றது. கடந்த ஒப்பந்தத்தில் 15 சதவீதம் பெற்ற நிலையில், தற்போது விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டும், வேலைப்பளுவை கருத்தில் கொண்டும் 20 சதவீதமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். பல்வேறு போராட்டங்கள் மூலம் எதிா்ப்பை தெரிவித்தோம். இதனைத் தொடா்ந்தே, ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் மேற்கொண்டோம். இதன்பின் ஊதிய உயா்வு உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில், மாா்ச் 11, 12, 13 ஆகிய தேதிகளில் 3 நாள்கள் வேலைநிறுத்தமும், அதிலும் உடன்பாடு ஏற்படவில்லையெனில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தையும் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய வேலைநிறுத்தத்தில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் ஊழியா்கள், அதிகாரிகள் 2,300 போ் வரை பங்கேற்றுள்ளனா். நாளொன்றுக்கு ரூ.2,500 கோடி பணப்பரிவா்த்தனை முடங்கியுள்ளது. நாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனா் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT