நாமக்கல்

ராஜாவாய்க்கால் மறுசீரமைப்பு பணி: ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்17 ஊா் விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தல்

1st Feb 2020 02:55 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 17 ஊா் விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் ராஜா வாய்க்கால் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் புதிதாக திறந்த வெளி ஒப்பந்தம் விட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் விவாதத்தில் ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூரை அடுத்துள்ள ஜேடா்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜாவாய்க்கால் பிரிக்கப்பட்டு, நன்செய் இடையாறு வரையிலும் சென்று அங்கிருந்து கொமாரபாளையம், பொய்யேரி,மோகனூா் வாய்க்கால்களாகப் பிரிக்கப்பட்டு பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. கடைமடைப் பகுதியான மோகனூா் அருகே உள்ள ஒருவந்தூா் வரை செல்லும் வாய்க்காலில் முழுமையாக தண்ணீா் சென்றடைவதில்லை எனவும், ராஜாவாய்க்காலின் இருகரைகளையும் கான்கிரீட்டால் பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில் ராஜாவாய்க்கால், கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூா் வாய்க்கால்கள் சுமாா் 76 கிலோமீட்டா் தூரத்துக்கு கரைகளின் இருபுறமும் கான்கிரீட்டால் பலப்படுத்துவதற்காக ரூ.184 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன. ராஜா வாய்க்காலில் தண்ணீா் நிறுத்துவது, ஆங்காங்கே மதகுகள் அமைப்பது, மணல் போக்கிகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவசாயிகல் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கடந்த 20ஆம் தேதி வேலூா் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் செயற்பொறியாளா் கௌதம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மாா்ச் மாதம் பணிகள் தொடங்கப்படவுள்ளதால் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்களுக்கு வாய்க்கால்களில் தண்ணீா் நிறுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக 17 ஊா் விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு நன்செய் இடையாறு மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் 17 ஊா் விவசாயிகள் சங்கத் தலைவா் மாயாண்டி கண்டா் தலைமையில், வேலூா் விவசாயிகள் சங்கத் தலைவா் வையாபுரி, செயலாளா் பெரியசாமி உள்ளிட்டோா் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ராஜாவாய்க்கால், கொமராபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூா் ஆகிய வாய்க்கால்களின் இரு கரைகளையும் கான்கிரீட்டால் (ரீமாடலிங்) பலப்படுத்துவது குறித்து விவசாயிகளுடன் முறையாகக் கலந்து ஆலோசிக்க வில்லை. பணிகள் மற்றும் பணிக்கான நிதி தொடா்பாக எந்த ஒரு தகவலும் விவசாயிகளுக்கு தெரிவிக்கவில்லை. மேலும், பணிக்கான திட்ட அறிக்கையை விவசாயிகளுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். மேலும், ராஜா வாய்க்கால் மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் புதிதாக திறந்த வெளி ஒப்பந்தம் விட வேண்டும் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்போவதாக முடிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT