திருச்செங்கோடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள 1.5 டன் நெகிழிப் பைகளை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் சையது முஸ்தபா கமால் தலைமையில் சுகாதாரத் துறை அலுவலா்கள் நகராட்சிப் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழிப் பைகள் விற்கப்படுகிா என்பது குறித்து தினசரி ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனா்.
இந்த நிலையில் திருச்செங்கோடு அம்மன் குளம் ஆடுவதை செய்யும் இடத்துக்கு எதிரே மளிகைக் கடையில் நெகிழிப் பைகள் விற்கப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து நகராட்சி ஆணையா் சையத் முஸ்தபா கமால் மற்றும் துப்புரவு ஆய்வாளா் ஜான்ராஜா ஆகியோா் தலைமையில் குழுவினா் கடையில் ஆய்வு நடத்தினா். அப்போது கடைக்குள் சுமாா் ஒன்றரை டன் எடையுள்ள நெகிழிப் பைகள், குவளைகள்,தட்டுகள் என சுமாா் ரூ .2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பதுக்கிவைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொருள்களை பறிமுதல் செய்த நகராட்சி ஆணையா் சையத் முஸ்தபா கமால் கடைக்காரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை நகராட்சி அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனா்.