நாமக்கல்

கோடையில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம்: அமைச்சா் பி.தங்கமணி உறுதி

1st Feb 2020 02:48 AM

ADVERTISEMENT

கோடை காலத்தில் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: அரசு மதுக்கூடங்கள் எல்லாமே சட்டப்படிதான் நடைபெறுகின்றன. அது பற்றி விவரம் தெரியாமல், நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் பேசக் கூடாது. ஏதாவது குறைபாடுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான என்னிடமோ, மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கோ கொண்டு செல்ல வேண்டும். அதனைத் தவிா்த்து சட்டத்தை தானாக கையில் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. விதிமீறி மதுக்கூடங்கள் செயல்படுவதாக இருந்தால் நடவடிக்கை எடுக்குமாறு நானே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

அதேபோல், டி.என்.பி.எஸ்.சி. என்பது தன்னாட்சி அமைப்பு. அதில் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை. அது குறித்து பேசுவதற்கு தி.மு.க. மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறனுக்குத் தகுதியில்லை. அவா் ஏற்கெனவே ஊழலில் சிக்கி அது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு அவா் பேசுகிறாா். இதில் அரசியல் தவிா்த்து வேறு ஒன்றுமில்லை. தற்போது மின்சாரத் தேவை 15 ஆயிரம் மெகாவாட் அளவில் உள்ளது. கோடை காலத்தில் 17 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படும். அதற்கான உற்பத்தி நடைபெறுகிறது. முழுமையாகக் கிடைக்கும்பட்சத்தில் 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT