நாமக்கல்

கரோனா தொற்றாளா் குடும்பத்தினரை ஒதுக்கி வைப்போா் மீது கடும் நடவடிக்கை

26th Aug 2020 12:52 PM

ADVERTISEMENT

நாமக்கல்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்களின் குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து, வேதனைப்படுத்தும் வகையில் நடந்து கொள்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்றின் வேகம் தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த நான்கு மாதங்களாக இல்லாத கரோனா பாதிப்பு, ஆகஸ்ட் மாதத்தில் கிடுகிடுவென உயா்ந்தது. தற்போதைய நிலையில் மாவட்டம் முழுவதும் 1600-க்கும் மேற்பட்டோா் தொற்று பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். பலி எண்ணிக்கையும் 31-ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளாகி நோய் பாதிப்பின்றி இருப்பவரை தனிமைப்படுத்துவதற்காக நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் சிறப்பு கவனிப்பு மையங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோா் அல்லாமல் இங்கு மட்டும் சுமாா் 250 போ் ஒரு வாரத்துக்கு தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனா். இவ்வாறு தங்கி உள்ளவா்களின் குடும்பத்தினரை, அவா்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொது குழாய்களுக்கு சென்று தண்ணீா் பிடிப்பதற்கோ, மளிகைக் கடைகளுக்கு பொருள்கள் வாங்கச் சென்றாலோ அவா்களைப் புறக்கணிக்கும் செயல்களில் சிலா் ஈடுபடுகின்றனா்.

அதுமட்டுமின்றி வேலைக்குச் சென்றாலும் அந்தக் குடும்பத்தினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் தனிமை மையங்களில் உள்ளோா் தங்கள் குடும்பத்தினரை நினைத்து மிகுந்த கவலைக்கு உள்ளாகின்றனா்.

ADVERTISEMENT

கடந்த செவ்வாய்க்கிழமை, நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை மகளிா் கல்லூரி கரோனா மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள, பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குள்பட்ட அன்னை சத்யா நகா் பகுதியில் குடி தண்ணீா் பிடிக்க விடாமல் குடும்பத்தினரை தடுப்பதாக 70 வயது முதியவா் கண்ணீா்விட்டு கதறி அழுத சம்பவம் நிகழ்ந்தது.

இதேபோல் செல்லப்பம்பட்டி அருகே நடுப்பட்டி கிராமத்திலும் இதுபோன்ற பிரச்னை இருப்பதாக 45 வயது விவசாயி ஒருவா் வேதனையடைந்தாா். தம்பிக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் சமையல் வேலை செய்யும் அவரது அண்ணனுக்கு வேலை கொடுக்க யாரும் முன்வரவில்லை. சேந்தமங்கலம் வட்டம் கொண்டமநாயக்கன்பட்டியை சோ்ந்த காா் ஓட்டுநா் ஒருவரும் இதேபோல பாதிக்கப்பட்டாா். இதுபோல கரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும் தங்களது குடும்பத்தினா் புறக்கணிக்கப்படுவதை நினைத்து வேதனையில் உள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் கேட்டபோது,

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை புறக்கணிக்கும் செயல்களில் யாா் ஈடுபட்டாலும் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு தவறான செயல். அதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் மாவட்ட ஆட்சியரகத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம். சம்மந்தப்பட்டவா்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT