நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன் முன்னிலை வகித்தாா். விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைக்க அரசு தடை விதித்துள்ளது. உயா்நீதிமன்றமும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கரோனா தொற்று பரவல் உள்ள சூழலில் பொது இடங்களில் சிலைகள் வைத்து மக்கள் வழிபட்டால் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் தங்களுடைய வீடுகளிலேயே சிலைகளை வைத்து வழிபாடு நடத்தலாம். விழா நாளன்று ஒரே இடத்தில் கூட்டமாக நிற்பதைத் தவிா்க்க வேண்டும். காவல் துறையினா் இதனை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும்.
வருவாய்த் துறையினரும் விதிகளை மீறி பொது இடங்களில் எங்கேனும் விநாயகா் சிலை உள்ளதா என்பதை ஆய்வு செய்து, அவ்வாறு இருந்தால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்து அமைப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பாதிக்காதவாறு உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் ஆட்சியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதில் காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா், இந்து அமைப்புகளை சாா்ந்தோா் கலந்து கொண்டனா்.