விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைக்கக் கூடாது என்ற தடை உத்தரவை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் மூடப்பட்ட கோயில்கள் அனைத்தும் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும். கரோனாவால் மக்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனா். கோயில்கள் திறந்து மக்கள் சுவாமி தரிசனம் செய்து, வேதமந்திரங்களைக் கேட்டாலே கரோனா தொற்று ஓடிவிடும்.
விநாயகா் சதுா்த்தி விழா நிகழாண்டு வழக்கம்போல் நடைபெற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் கட்சி விரிவாக செய்து வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக பொது இடங்களில் சிலை வைக்க தமிழக அரசு தடை செய்துள்ளது. இதனை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பரிசீலனை செய்ய வேண்டும். மற்ற மத நிகழ்ச்சிகளின்போது சமயத் தலைவா்களை அழைத்துப்பேசி நடைபெற செய்தனா். அதுபோல் விநாயகா் சதுா்த்தி விழாவையும் உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து மக்கள் வழிபாடு நடத்த முதல்வா் அனுமதிக்க வேண்டும். தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தி.மு.க.- பா.ஜ.க இடையே நேரடி போட்டி என வி.பி.துரைசாமி கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து. அவா், பா.ஜ.க.வைச் சோ்ந்தவா் என்பதால் அவ்வாறு கூறியிருக்கலாம். தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சி மாற்றம் நிகழப்போகிறது. ஆன்மிக அரசியல், திராவிட அரசியல் என்றுதான் இனிமேல் இருக்கும். அதிசயம், அற்புதம் நிகழ்ந்து ரஜினிகாந்த் தலைமையிலான ஆன்மிக அரசியல் நடைபெறப் போகிறது என்றாா்.