நாமக்கல்

பரமத்தி வேலூரில் தடையை மீறிய இரண்டு வங்கிகளுக்கு ‘சீல்’

29th Apr 2020 08:22 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூரில் ஊரடக்கு உத்தரவை மீறி இயங்கியதாக அரசுடமையாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிக்கு பரமத்தி வேலூா் வட்டாட்சியா் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

கரோனா பரவலைத் தடுக்க, கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடந்த 17-ஆம் தேதி முதல் அரசின் மறு உத்தரவு வரும் வரை செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பரமத்தி வேலூரில் உள்ள அரசுடமையாகப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு ஆகிய இரு வங்கிகளும் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிா்வாகத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, பரமத்தி வேலூா் வட்டாட்சியா் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினா், காவிரி சாலையில் உள்ள நகர கூட்டுறவு வங்கிக்கு சென்று உள்ளே இருந்த வங்கி ஊழியா்களை வெளியே அனுப்பி விட்டு வங்கிக்கு ‘சீல்’ வைத்தனா்.

இதேபோல், பரமத்தி வேலூா் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிக்குச் சென்று பாா்த்த போது வங்கி பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, வங்கிக்குள் யாரும் இல்லை என ஏற்கெனவே பூட்டப்பட்டிருந்த பூட்டுக்கு ‘சீல்’ வைத்து சென்றனா். ஆனால், வங்கியின் வெளிப்பக்கம் பூட்டிவிட்டு உள்ளே இருந்த வங்கி மேலாளா் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து, உடனடியாக அங்கு வந்த காவல் துறை ஆய்வாளா் மனோகரன், வட்டாட்சியா் செல்வராஜை தொடா்பு கொண்டு கேட்ட போது, வங்கி பூட்டப்பட்டிருந்ததால், வங்கிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதாகக் கூறினாா். பின்னா் ‘சீலை’ அகற்றி உள்ளே சிக்கியிருந்த வங்கி மேலாளா் மற்றும் 5 வங்கி ஊழியா்களை வெளியே அனுப்பினா். தடையை மீறி வங்கியைத் திறக்கக் கூடாது எனவும், அத்தியாவசியம் ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் போலீஸாா் அவா்களுக்கு அறிவுரை வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT