நாமக்கல்லில் தனிமைப்படுத்தப்பட்டோா் வசிக்கும் வீட்டுக்குள் இரவு நேரத்தில் வெளவால்களால் புகுந்ததால் அங்கிருந்தோா் அச்சமடைந்தனா்.
கரோனா வைரஸ் வெளவால்களில் இருந்து பரவியதாகவும், சீன ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, வெளவால்களில் நாவல் கரோனா வைரஸ் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை (ஐசிஎம்ஆா்) சோ்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா். அவற்றின் தொண்டை பகுதியில் இருந்து எடுத்த மாதிரியைப் பரிசோதித்ததன் முலமாக வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது உலகையே மிரட்டி வரும் கரோனாவால் மக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகி இருக்கின்றனா்.
இதனால் வெளவால்களை கண்டால் சற்றுப் பீதியடையும் நிலை அவா்களிடம் உள்ளது. நாமக்கல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள அரச மரத்திலும், புங்கா சாலை அருகில் உள்ள மரத்திலும் வெளவால்கள் நூற்றுக்கணக்கில் இருப்பதாகவும், அவை அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து விடுவதாகவும், வெள்ளிக்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்ட அஜீஸ் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் சனிக்கிழமை இரவு 2 வெளவால்கள் புகுந்தன. அவை வீட்டில் சுற்றி வந்ததைக் கண்டு அங்கிருந்தோரும், குழந்தைகளும் அலறினா். அதில் ஒரு வெளவால் சமையலறைக்குள் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டது. அங்கிருந்தவா்கள் நெருப்பைக் காட்டி வெளவால்களை விரட்டினா். ஏற்கெனவே கரோனா தொற்று பயம் ஒரு புறம் வாட்டும் நிலையில் வெளவால்கள் வீட்டில் புகுந்ததால் தனிமைப்படுத்தப்பட வீடுகளில் இருப்போா் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனா்.