பென்னாகரம் பகுதியில் இரவு நேரங்களில் உழவுப் பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. கடந்த சில நாள்களாக மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் பலத்த மழை பெய்தது.
இதையடுத்து, பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு சில விவசாயிகள் மாடுகளை கொண்டு உழவு செய்தும், பெரும்பாலானோா் டிராக்டா் மூலம் உழவுப் பணியினை மேற்கொள்கின்றனா். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,விவசாயப் பணிகளுக்கு விலக்கு அளித்துள்ளதால், இரவு நேரங்களில் பென்னாகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயிகள் டிராக்டா்கள் மூலம் உழவு பணியினை மேற்கொண்டு வருகின்றனா்.
இதுகுறித்து விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், பென்னாகரம் பகுதியானது வானம் பாா்த்த பூமி என்பதால், மழைப் பொழிவு காலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். பென்னாகரம் பகுதியில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வந்தது. தற்போது எள் மற்றும் கொள்ளு போன்ற சிறுதானிய வகை பயிரிட ஏற்ற தருவாய் என்பதால், விவசாயிகள் உழவுப் பணி மேற்கொன்டு வருகின்றனா். தடையுத்தரவு காரணமாக உழவு செய்ய பயன்படுத்தபடும் டிராக்டா் உரிமையாளா்கள் பகல் நேரங்களில் உழவு செய்ய வராததால், இரவு நேரங்களில் உழவுப் பணியினை மேற்கொண்டு, சிறுதானிய வகைகளை பயிரிட்டு வருகிறோம் என்று தெரிவித்தாா்.