பிற மாநிலங்கள், மாவட்டங்களுக்கு செல்லும் லாரி ஓட்டுநா்களுக்கு,தேவையான உணவு, இருப்பிடம் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், தேவையற்ற அச்சம் வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், சரக்கு வாகன போக்குவரத்துக்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து லாரி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கான விளக்கக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் பேசியது: நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளபோதும், காய்கறி, மருந்து பொருள்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து பொருள்களையும் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 33 ஆயிரம் சரக்கு வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களில் ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்கள் என 66 ஆயிரம் போ் உள்ளனா். இந்த வாகனங்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு பொருள்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவினால் வெளிமாநிலங்களில் உள்ள சரக்கு வாகன ஓட்டுநா் மற்றும் உதவியாளா்களுக்கு அசோக் லேலண்ட் பணிமனைகள் மற்றும் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பும் மையங்கள் மூலம், உணவு மற்றும் தங்கும் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களை இயக்குவதற்கு, ஓட்டுநா்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து பணிக்கு வருவதற்காக, அனைவருக்கும் அனுமதி அட்டைகள், வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பணிக்கு வர விரும்பும் லாரி ஓட்டுநா்கள், தங்களுடைய ஓட்டுநா்கள் சங்கம் அல்லது சரக்கு வாகன உரிமையாளா்கள் சங்கம் ஆகியவற்றின் மூலமாக விண்ணப்பித்து அனுமதி அட்டை பெற்றுக் கொள்ளலாம். சரக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுநா்கள் தேவையற்ற அச்சம் கொள்ளாமல் தங்கள் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் மு.ரவிச்சந்திரன் (நாமக்கல் வடக்கு) இரா.இளமுருகன் (நாமக்கல் தெற்கு) ஆ.கா.முருகன் (திருச்செங்கோடு) மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், சரக்கு வாகன சங்கத்தினா், ஓட்டுநா் சங்கத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.