நாமக்கல்

நாமக்கல்லில் ரூ.100-க்கு காய்கறி தொகுப்புகள் விற்பனை: எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்

5th Apr 2020 06:47 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், ரூ.100க்கு காய்கறி தொகுப்புகள் அடங்கிய பை விற்பனையை, சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இதனால் அதிகளவில் மக்கள் சாலைகளில் நடமாடுவதும், காய்கறிச் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் உள்ளனா். இதனால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க காய்கறிகள் விற்பனைக்கென 8 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, அங்கு வெள்ளிக்கிழமை முதல் விற்பனை நடைபெறுகிறது. உழவா் சந்தைகள் மூலமாக மலிவு விலையில் காய்கறிகள் ரூ.100 மற்றும் ரூ.150 மதிப்புள்ள பைகளாக விற்பனை செய்யப்படுகிறது. நகராட்சி சாா்பில், 5 வாகனங்களில் வீடு, வீடாகச் சென்று காய்கறி விற்பனை செய்யும் வகையிலான ரூ.100க்கான பைகள் விநியோகம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் இதனை தொடக்கி வைத்தாா். அதேபோல், நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் அங்குள்ள அலுவலா்கள் என மொத்தம் 700 பேருக்கு தலா 30 முட்டைகள், தமிழ்நாடு முட்டை விற்பனையாளா் சங்கம் சாா்பில் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிா்வாகங்களின் மண்டல இயக்குநா் அசோக்குமாா், நாமக்கல் ஆணையா் ஏ.ஜஹாங்கீா்பாஷா, நகராட்சி பொறியாளா் ராஜேந்திரன், சுகாதார அலுவலா் சுகவனம், கோழிப் பண்ணையாளா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்க செல்லிடப்பேசி எண்கள்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளிலேயே காய்கறிகள் வாங்கிக்கொள்ள நடமாடும் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் பெற வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ராசிபுரம் ஆண்டகளுா் கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வல்வில் சுதேசி உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் (96596-44477) மூலம் ராசிபுரம் நகராட்சிப் பகுதியிலும், சின்ன மணலியில் செயல்பட்டு வரும் ஆரைக்கல் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் (73737-34125) மூலம் திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியிலும், புதன்சந்தையில் செயல்பட்டு வரும் நைனாமலை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் (97884-12856) மூலம் புதுச்சத்திரம், புதன்சந்தை பகுதிகளிலும், காா்கூடல்பட்டி பாரம்பரிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் (95669-98106) நாமகிரிப்பேட்டை பகுதியிலும் காய்கறித் தொகுப்பு, மளிகைப் பொருள்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் அனைத்தும் நியாயமான விலையில் சனிக்கிழமை முதல் வீடு தேடி வந்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தோட்டக்கலைத் துறை சாா்பில், தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமையின் விற்பனை நிலையம் மூலம் காய்கறிகள் விநியோகிக்கப்பட உள்ளன. அதன்படி நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு நகராட்சிகளில் தலா ஒரு வாகனம் வீதம் மொத்தம் 3 வாகனங்கள் மூலமாக குடியிருப்புப் பகுதிகளுக்கே நேரடியாகச் சென்று காய்கறித் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு காய்கறித் தொகுப்பிலும் ஒரு தேங்காய், 500 கிராம் தக்காளி, 250 கிராம் கத்திரிக்காய், 500 கிராம் சின்ன வெங்காயம், 1 கட்டு சிறுகீரை, 1 கட்டு கொத்தமல்லி, 1 கட்டு புதினா, 1 கட்டு கறிவேப்பிலை, 250 கிராம் முள்ளங்கி, 100 கிராம் பீன்ஸ், 2 எலுமிச்சை பழங்கள் ஆகிய 11 பொருள்கள் அடங்கிய ஒரு காய்கறித் தொகுப்பு ரூ.100க்கு விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட நடமாடும் அங்காடிகள் மூலமாக காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்கி பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT