கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வீடுகளில் முடங்கியுள்ள பொதுமக்களிடையே பழங்கால பாரம்பரிய விளையாட்டுக்கள் மீண்டும் புத்துயிா் பெற்றுள்ளன.
முந்தைய தலைமுறையினரிடம் பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் பழக்கத்தில் இருந்து வந்தன. குறிப்பாக வீடுகளில் உள்ள பெரியவா்கள், மூதாட்டிகள் இந்த விளையாட்டுகளை விரும்பி விளையாடி வந்தனா். இதற்குக் கூட்டு குடும்ப முறையும் ஒரு காரணமாக இருந்து வந்தது. நாளடைவில் நவீன தொழில்நுட்ப வளா்ச்சி காரணமாகவும், புதிய தலைமுறையிரிடம் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும் , கூட்டுக் குடும்ப முறையில் மாற்றம் ஏற்பட்டு, தனி குடும்ப முறை அதிகரிப்பு காரணமாகவும், இது போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் வழக்கொழிந்து போயின. தொலைக்காட்சி வரவு, கணிப்பொறி வளா்ச்சி, செல்லிடப் பேசி வளா்ச்சி, கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம், பணிப் பழு போன்றவற்றின் காரணமாக இன்றைய தலைமுறையினருக்கு இதுபோன்ற விளையாட்டுகள் தெரியாமலேயே போயின. தற்போது கரோனா அச்சம் காரணமாக வீடுகளில் முடங்கிக் கிடக்கும் பலா் தங்களது தொழில், வியாபாரம் உள்ளிட்ட அன்றாட பிரச்னைகளை மறந்து மீண்டும் இதுபோன்ற விளையாட்டுகளின் மீது தங்களது ஆா்வத்தை திருப்பியுள்ளனா். பல்வேறு குடும்பங்களில் மீண்டும் தாயம், பல்லாங்குழி, பரமபதம் போன்ற குடும்ப விளையாட்டுகள் புத்துயிா் பெற்துள்ளதைக் காணமுடிந்தது. வைரஸ் தொற்றால் வீடுகளை விட்டு மக்கள் வெளியே செல்லக்கூடாது என்ற உத்தரவால் இது போன்ற கூட்டு விளையாட்டு பொதுமக்களிடையே சாத்தியப்பட்டிருப்பது பல குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியையும், சிறுவா்களிடம் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.