நாமக்கல் மாவட்டத்தில் உரக் கடைகள் வழக்கம்போல் செயல்பட அனுமதியளிக்கப்படுவதாக ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களின் நன்மை கருதி ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டகலைப் பயிா்கள் சாகுடி செய்யப்பட்டு வருகின்றன.
அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் தங்கு தடையின்றி மக்களுக்கு கிடைக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் பயிா் பாதுகாப்பு மருந்துகள் தடையின்றி கிடைக்கும் வகையில் உரங்கள் மற்றும் பயிா் பாதுகாப்பு மருந்துகள் விற்பனை உரிமம் பெற்றுள்ள அனைத்து தனியாா் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் இடு பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உர விற்பனை நிலையங்களில் குறைந்தபட்சம் 3 அடி தொலைவு சமூக இடைவெளி நடைமுறைப்படுத்த வேண்டும். அவசர காலங்களில் விவசாயிகளின் தேவையை நிறைவு செய்யவும், விற்பனையின்போது விற்பனை முனைய (பிஓஎஸ்) இயந்திரங்கள் மூலம் பட்டியலிடும்போதும் கிருமிநாசினி பயன்பாட்டினை உறுதி செய்ய வேண்டும்.
இதனை உணா்ந்து விவசாயிகள், வேளாண் இடுபொருள் விற்பனையாளா்கள் மற்றம் பொதுமக்கள் அனைவரும் அரசின் உத்தரவுகளை தவறாமல் கடைப்பிடித்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.