கொல்லிமலையில் தொண்டை அரிப்பான் நோய் பாதிப்பால் சிறுவன் பலியானாரா என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் வாழும் சிறுவர்களுக்கு தொண்டை அரிப்பான் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் கொல்லிமலையில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை சுகாதாரத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து தடுப்பு மருந்துகளை வழங்கினர்.
இந்த நிலையில், கொல்லிமலை அருகே ஆரியூர் நாடு கிழக்கு வளவு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் நித்திஷ் (9) தொண்டை அரிப்பான் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. காளப்பநாயக்கன்பட்டி நஞ்சுண்டாபுரம் தொடக்கப் பள்ளியில் பயின்று வந்த நிலையில், நோய் பாதிப்புக்குள்ளான சிறுவனை இரு மாதங்களுக்கு முன்பு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்டார். ஓரிரு தினங்களுக்கு முன்பு அவர் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
அதன்பின் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு சிறுவன் நிதிஷ் உயிரிழந்தார். இத்தகவலால் கொல்லிமலைப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சுகாதாரத் துறை அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று குழந்தைகளை பரிசோதித்து மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனர். சிறுவன் தொண்டை அரிப்பான் நோயினால் தான் உயிரிழந்தாரா என்பது தொடர்பாகவும் அவர்கள் விசாரிக்கின்றனர். நோயின் தாக்கம் குறித்தும், அதனால் ஏற்படும் தொந்தரவுகள் பற்றியும் மலைவாழ் மக்களிடத்தில் விளக்கம் அளித்து வருகின்றனர்.