நாமக்கல்

தீபாவளிக்கு முன்பாக நியாய விலைக் கடைகளில் ஜவ்வரிசி விநியோகம்: சேகோசர்வ் தலைவர் தகவல்

17th Sep 2019 10:02 AM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஜவ்வரிசி விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் இதற்காக மாவட்ட வாரியாக தேவை எவ்வளவு என்பது குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது என்றும் சேலம் சேகோசர்வ் தலைவர் என்.தமிழ்மணி தெரிவித்தார்.
 நாமக்கல் தாலுகா சேகோசர்வ், ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், செல்லப்பம்பட்டியில் அனைத்து சேகோ ஆலைகளையும் கண்காணிக்கும் வகையில் கணினி கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை சேலம் சேகோசர்வ் தலைவர் என்.தமிழ்மணி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 தமிழகம் முழுவதும் 450 சேகோ ஆலைகள் இருந்த நிலையில், தற்போது 250 ஆலைகள் மட்டுமே உள்ளன. சேகோத் தொழிலை மேம்படுத்தும் வகையில், வட மாநிலங்களுக்கு நேரடியாக ஜவ்வரிசியை எடுத்து சென்று விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதுமட்டுமின்றி, மதர்சேகோ என்ற திட்டத்தின் அடிப்படையில், நியாய விலைக்கடைகளில் ஜவ்வரிசி விநியோகிக்கும் திட்டம் தீபாவளிக்கு முன்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் தொடங்கப்பட உள்ளது.
 மாவட்ட வாரியாக எவ்வளவு தேவை என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ஜவ்வரிசி மூலம் என்னென்ன உணவுகள் தயார் செய்யலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வாகனம் ஒன்று மாநிலம் முழுவதும் உலா வர உள்ளது. அதற்கான அனுமதி கிடைத்து விட்டது. விரைவில் அந்த வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
 மரவள்ளிக் கிழங்கை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சேகோசர்வ் நிர்வாகமே கொள்முதல் செய்து ஆலை உரிமையாளர்களுக்கு வழங்க உள்ளது. அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
 கண்காணிப்பு மையங்கள்:சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சேகோசர்வ் ஆலைகளில், சேகோ ஆலைகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக நாமக்கல் செல்லப்பம்பட்டியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 ஜவ்வரிசியில் கலப்படம் என்ற அவதூறை போக்கவும், எந்தவித கெடுதலும் இல்லாத உணவுப் பொருள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது, சேகோ ஆலைகளில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் மூட்டை ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் மூட்டை வரை உற்பத்தியாகிறது. ஓராண்டில் ரூ.460 கோடி வருவாய் ஈட்டும் சேகோசர்வ் நிர்வாகம், ரூ.ஆயிரம் கோடியை விற்பனை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே உள்ள சேகோ ஆலைகள், வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
 நிகழ்ச்சியில், நாமக்கல் தாலுகா சேகோசர்வ் சங்கச் செயலர் முத்துராஜா, மின்னாம்பள்ளி நடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT