நாமக்கல்

விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க எதிர்ப்புத் தெரிவித்து மனு

10th Sep 2019 10:36 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்கவுள்ளதை எதிர்த்து, திங்கள்கிழமை ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். 
பொதுத்துறை நிறுவனமான பெட்ரோலிய நிறுவனம் ஒன்று, கோவை மாவட்டம், இருகூர் முதல் கர்நாடகம் தேவனகுந்தி வரை விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய்களை பதிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக 312 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த குழாய் பதிக்கப்படுவதால், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் வட்டங்களுக்குள்பட்ட சிக்கநாயக்கன்பாளையம், தொட்டியபாளையம், ஆனங்கூர், தேவனாங்குறிச்சி, கருவேப்பம்பட்டி வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் இக்குழாய் பதிக்கப்படுகிறது.
இதனால், சிறு, குறு விவசாயிகள் தங்களது மொத்த நிலத்தையும் இழக்க நேரிட்டு, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லாமல், சாலையோரமாக எடுத்துச் செல்லவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, திங்கள்கிழமை விவசாயிகள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் கே.முகமதுஅலி தலைமையில் சென்று நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மாவட்டச் செயலர் பி.பெருமாள், மாவட்டப் பொருளாளர் மு.து.செல்வராஜ், மாவட்ட உதவிச் செயலர் ஆர்.வேலாயுதம், கிருஷ்ணன், சதாசிவம் மற்றும் விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT